• Login / Register
  • முகப்பு

    2,000 உணவு பொட்டலங்கள்.. உளவுத்துறை எச்சரிக்கை - ஆட்சி கவிழ்ப்பு சதியின் பின்னணி!

    இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான புலனாய்வு தகவலை அடுத்து கொழும்பு நகரின் முக்கிய இடங்கள் தீவிர பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

    ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலை அடுத்து உச்சகட்ட பாதுகாப்பிற்குள் கொழும்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் முதல் காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பிரிவினர் மற்றும் முப்படையினர் கொழும்பு நகரின் பல இடங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி மாவத்தை ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    முக்கியமாக கொழும்பு பல்கலைக்கழகம், சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கொள்ளுப்பட்டி சுற்றுவட்டம் போன்ற பகுதிகளில் மிக அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

    முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமனம் செய்யப்பட உள்ளதற்காகவே கொழும்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில், கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் 2,000 உணவு பொட்டலங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட தகவலே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

    கொழும்பு பல்கலைகழக பழைய மாணவர் ஒன்றுகூடலுக்காக 2,000 உணவுப் பொட்டலங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இத்தகவல் தொடர்பில் அறிந்த புலனாய்வு பிரிவினர் அதனை பல்கலைக் கழக மாணவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தயாராகின்றனர் என்ற கோணத்தில் தவறாக புரிந்து கொண்டதே கொழும்பில் திடீர் பாதுகாப்பு அதிகரிப்புக்கு காரணமென தெரியவந்துள்ளது.

    அனைத்து பல்கலைகழக்கழக மாணவர் ஒன்றியத்தினர், வார இறுதியில் கொழும்பு நகரில் திடீர் முற்றுகையில் ஈடுபட்டு, அரச நிறுவனங்களை கையகப்படுத்தி, புதிய போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதில் 750 பேர் வரையில் பங்கேற்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டதாக தெரிய வந்தது.

    கொழும்பு பல்கலைகழக மாணவர் தரப்பினர், 2000 உணவுப் பொதிக்கு முன்பதிவு செய்திருந்த தகவலை உளவுத்துறை பெற்றதை தொடர்ந்தே, இந்த புலனாய்வு தகவல் வெளியிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    சனிக்கிழமை பழைய மாணவர் ஒன்றுகூடல் நடைபெற்றதாகவும், அதற்காக இந்த உணவுப் பொதிகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை போராட்ட முன்னேற்பாடு என பாதுகாப்பு தரப்பு நினைத்து விட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இவ்வாறு அடிப்படையற்ற புலனாய்வுத் தகவல்களால் பாதுகாப்பு தரப்பினரை அலைக்கழித்தமை, அவர்களுக்கான போக்குவரத்து செலவு உட்பட்ட விடயங்களால் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே கடும் அதிருப்தி கொண்டுள்ளதாக மேலும் அறியமுடிந்தது.

    இதேவேளை, கொழும்பு நகரில் முப்படையினர் குவிக்கப்பட்டமை, பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை என இராணுவத் தரப்பு விளக்கமளித்துள்ளது.

    அவசரநிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினரும் முன்பயிற்சிகளை வழங்குவதற்காக கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் முப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

    இதன்படி முப்படையினரும் ஒத்திகையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும், அன்றி எவ்வித கடமை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

    அவசர காலங்களில் பொலிஸாருக்கு கடமையாற்றும் வகையில் இராணுவத்தினர் இவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான பயிற்சிக்கான இறுதி திகதியை அறிவிக்க முடியாது எனவும் இலங்கை இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை குறிப்பிடப்படாத புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்த நிலையில் இராணுவத்தரப்பில் ஒத்திகை நடவடிக்கையாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment