• Login / Register
  • முகப்பு

    பெட்ரோல் விலை உயர்வு; கேரள-தமிழ்நாடு எல்லைக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்!

    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கேரள - தமிழ்நாடு எல்லையோர பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் படையடுத்து வருகின்றனர்.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன.

    தமிழகத்தில் 300 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு எல்லாம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலாகும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரளா முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. ஆனாலும் விலை உயர்வு நேற்று (01) அமலுக்கு வந்தது

    கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், கேரள எல்லையோரம் உள்ள தமிழக பெட்ரோல் நிலையங்களுக்கு அம்மாநில வாகன ஓட்டிகள் படையெடுத்தனர்.

    கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 98 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 98 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

    தமிழகத்தில் பெட்ரோல் 103 ரூபாய் 87 காசுகளுக்கும், டீசல் 95 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. இதன் காரணமாக, கேரளா மாநில வாகன ஓட்டிகள் கேரள எல்லையோரம் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு படையெடுத்தனர்.

    கேரளாவை விட, தமிழ்நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுவதால் கேரள மாநிலம் பாறசாலை, பூவார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தமிழக பகுதியான களியக்காவிளை பகுதிக்கு வந்து பெட்ரோல் நிரப்பிச் சென்றனர்.

    இதன் காரணமாக தமிழக எல்லையில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களிஸ் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    Leave A Comment