• Login / Register
  • முகப்பு

    இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று பொதுமக்கள் அஞ்சலி!

    மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடல் இன்றைய தினம் (02) கொழும்பில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டு வந்த நிலையில் அண்மைக்காலமாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் திகதி இரவு 91 ஆவது வயதில் காலமானார்.

    அனைவராலும் ஆர். சம்பந்தன் என அறியப்பட்ட இராஜவரோதயம் சம்பந்தன் 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பிறந்தவர்.

    யாழ்ப்பாணம் புனித பெட்ரிக் கல்லூரியில் அடிப்படைக் கல்வியைப் பயின்ற இவர், மேலும் பல பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.

    தொழில் ரீதியாக சட்டத்தரணியான இவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

    அதன்படி, 1977 முதல் 1983 வரையிலும், 1997 முதல் 2000 வரையிலும், 2001 முதல் இறக்கும் வரையிலும் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

    2015 இல் அமைக்கப்பட்ட ரணில் - மைத்திரி அரசாங்கத்தின் போது 3 வருட காலத்திற்கு ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    ஆயுத மௌனிப்பின் பின்னரான காலத்தில் இரா.சம்பந்தன் அரசியல் ரீதியாக தமிழ் மக்களை தலைமைதாங்கி செயற்பட்டிருந்தார்.

    இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அதியுச்ச விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்ட போதிலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை காண எவ்வித முன்னேற்றகரமான இலக்கினையும் எட்ட முடியாது போயிருந்தது.

    தமிழர்களின் அரசியல் பேரியக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டு தமிழர்களது அரசியல் பலம் சிதைக்கப்படும் போது அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மௌனமாக இருந்து வேடிக்கை பார்த்தார் என்ற குற்றச்சாட்டு தமிழ்த் தேசிய ஆர்வலர்களினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கடந்த ஜூன் 30 ஆம் திகதி காலமான இரா.சம்பந்தனின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில், இன்று (02) காலை 9மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
     
    அதேநேரம் நாளைய தினம் (03) நாடாளுமன்றில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 
     
    நாளை பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
     
    அதன்பின்னர் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. 
     
    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

    Leave A Comment