• Login / Register
  • செய்திகள்

    தேர்தல் வாக்குறுதி பற்றி வாய் திறக்காத திமுக எல்.முருகன் கண்டனம்

    மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

    ‘ஓராண்டாகியும் தேர்தல் வாக்குறுதி பற்றி திமுக வாய்திறப்பது இல்லை. சில பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஓட்டுகளை வாங்கிவிட்டு ஒரு வருடம் கழிந்து கூட அதுபற்றி வாய் திறக்காதது கண்டனத்துக்கு உரியது. தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவோம் என்றார்கள். ஆனால் அதுபற்றி எந்த இடத்திலும் இப்போது வாய் திறப்பதே இல்லை. திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

    திராவிட மாடல் என்று திமுகவினர் சொல்கிறார்கள். பல கிராமங்களில் தீண்டாமை இன்னும் தலைவிரித்து ஆடுகிறது. தனித்தனி மயானங்கள் உள்ளன. இதுதான் திராவிட மாடலா? கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

    உள்ளாட்சி வரிவிதிப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் ஏழை மக்கள் மீது 100 சதவிகித வரி திணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கேட்டதை விட அதிகமாக நிலக்கரி கொடுத்து வருகிறோம்.

    தமிழகத்தில் லாக் அப் மரணங்கள் நடக்கின்றன. மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். பட்டின பிரவேசத்துக்கு தடை விதிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இது இந்து மக்களை கோபப்படுத்தியுள்ளது. தக்க நேரத்தில் மக்கள் இதற்கு பதிலடி தருவார்கள். தமிழக அரசு தடையைத்திரும்பப் பெறும் என்று நினைக்கிறேன்’

    இவ்வாறு எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    Leave A Comment