• Login / Register
  • செய்திகள்

    துணை முதல்வராக உதயநிதி; ஆகஸ்ட்-19 இல் அறிவிப்பு - வெளியன தகவல்!

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் வரும் ஆகஸ்ட்-19 ஆம் திகதி அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்க இருப்பதான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன.

    சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவல் திமுக கட்சி முக்கியஸ்தர்களிடையே பேசுபொருளாக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பில் அண்மையில் கருத்து கூறிய உதயநிதி அதனை வதந்தி என்று தெரிவித்திருந்தார்.

    நான் துணை முதலமைச்சராக போவதாக வரும் செய்திகள் வதந்தி. எந்த பதவி வந்தாலும் இளைஞரணி செயலர் பதவியே நெருக்கமானது. வதந்திகளை நம்பி சிலர் இப்போதே துண்டு போட்டு வைக்கிறார்கள் என்றார்.

    இதேவேளை, முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் உதயநிதி துணை முதலமைச்சராவாரா என கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. “வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என தெரிவித்தார்.

    இந்நிலையில், திமுகவின் மூத்த அமைச்சர்கள் உதயநிதி துணை முதலமைச்சராவார் என்பதனை உறுதி செய்து வருகிறார்கள்.

    மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், துணை முதலமைச்சர் பதவிக்கு உதயநிதி தகுதியானவர் என்றார். இதே கருத்தை தான் அமைச்சர்கள் ஐ.பெரியசாமியும், பொன்முடியும் கூறினர்.

    இந்நிலையில் தான், வரும் 19ஆம் தேதி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என போட்டுடைத்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, நல்லது நடக்கும்; அது நாட்டிற்கும் கட்சிக்கும் நல்லதாக இருக்கும் என்றார்.

    உதயநிதி துணை முதலமைச்சரானால் சந்தோஷமே என்றார் மற்றொரு அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

    இதை ஆமோதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது அமைச்சர் கீதா ஜீவனின் பேச்சு. நேற்று கோவில்பட்டியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், உதயநிதியை வருங்கால துணை முதலமைச்சர் என்றே குறிப்பிட்டார்.

    ஜூனியர் அமைச்சரான அன்பில் மகேஷ் முதல் மூத்த அமைச்சர்கள் வரை உதயநிதிக்கு பச்சைக் கொடி காட்டினாலும், துணை முதலமைச்சராகப் போவதாகச் சொல்லப்படுவது வதந்திதான் என்றே கூறி வருகிறார் உதயநிதி.

    யார் என்ன சொன்னாலும் இதில் இறுதி முடிவு எடுக்கப்போவது என்னவோ முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்தான்.

    Leave A Comment