• Login / Register
  • செய்திகள்

    92 எம்.பி.கள் ரணிலுக்கு ஆதரவு; காலியாகும் ராஜபக்சகளின் கூடாரம்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் மொட்டு சின்னத்தில் தனி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது எனவும் ராஜபக்ச தரப்பு தீர்மானித்துள்ள நிலையில் அவர்களின் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடைபெற உள்ள அரசு தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதில்லை என ராஜபக்சக்கள் அதிரடி தீர்மானம் எடுத்துள்ளதாக நேற்றைய தினம் (ஜூலை-29) அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் மூலம் ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்டதோடு இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரசு தலைவர் ஒருவர் பதவி காலத்தில் நாட்டைவிட்டு விட்டு தப்பி ஓடிய சாதனைக்கு உரியவராக கோட்டபாய ராஜபக்ச மாறியிருந்தார்.

    இந்த பின்னணியில் இடைக்கால பிரதமராகவும், இடைக்கால ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்று ராஜபக்சேகளின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் ரணில் விக்ரமசிங்க.

    ராஜபக்சக்களின் அரசியலை பாதுகாத்தவாறு அரச இயந்திரத்தை தலைமை தாங்கி வரும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச தரப்பிற்கும் அரசியல் - அதிகாரம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் ரணில் விக்ரமசிங்க சார்பில் செலுத்தப்பட்டிருந்தது.

    பொது ஜன பெரமுன தரப்பில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மொட்டு கட்சியின் பொது வேட்பாளராக நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றதுடன் ரணிலுக்கான ஆதரவையும் பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்றைய தினம் (ஜூலை29) இடம்பெற்ற  சந்திப்பின் பின்னரே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இவ் அறிவிப்பிற்கு பின்னர் பெரமுன தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் எச்சரிக்கையை மீறி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்கமாக ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

    அமைச்சர்களான, பந்துல குணவர்த்தன, கஞ்சன விஜயசேகர, அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் பகிரங்கமாக தமது ஆதரவினை ரணிலுக்கு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.

    ஜனாதிபதியை சந்தித்து இன்று (ஜூலை-30) அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

    மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியாக களமிறங்க தீர்மானித்துள்ள நிலையில் அதனை மீறி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது.

    Leave A Comment