சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு!
சென்னையில் சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை வெளுத்துவாங்கிய நிலையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு (30) பரவலாக கனமழை பெய்தது.
சூறாவளிக் காற்றுடன் கனமழை
குறிப்பாக எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், அடையார், வேளச்சேரி, திருவான்மியூர், வளசரவாக்கம், வடபழனி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
பலத்த மழையால் எழும்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பெரம்பூர், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக முக்கிய சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாடியிலிருந்து அம்பத்தூர் வழியாக ஆவடி செல்லும் சாலையில் வெள்ள நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
விமான சேவை பாதிப்பு
மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இதனால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட விமானங்கள், தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னைக்கு வர வேண்டிய மதுரை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்தன.
விசாகப்பட்டினம் - சென்னை விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
மின் தடை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மூன்று நேரமாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் காலணிகள் வைக்கப் பயன்படும் இரும்பு பலகை சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
அதே நேரம் இன்று (31-ம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Leave A Comment