பின்வாங்கும் DR. அர்ச்சுனா; கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம் - கண்டிப்புடன் கட்டளை!
சர்ச்சைக்குரிய வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களையும் இதுவரை முன்வைக்காத நிலையில் வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அடுத்த அமர்வில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென சாவகச்சேரி நீதவான் கண்டிப்புடன் கட்டளை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விடயங்களில் இருந்து தப்பிக்கும் நோக்கில் இணக்கமாக தீர்வுகாண விரும்புவதாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் வழக்கு தொடுத்த வைத்தியர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்ட கையோடு குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலும் யாழ் மாவட்ட சுகாதாரத்துறை தொடர்பிலும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சர்ச்சையினையும் ஏற்படுத்தியிருந்தது.
இப்பின்னணியில் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சுகயீன விடுமுறையில் வைத்தியசாலையை விட்டு மருத்துவர் அர்ச்சுனா வெளியேறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை-15 மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்பிய மருத்துவர் அர்ச்சுனா அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டிருந்ததுடன் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டிருந்தார். இதையடுத்து பொலிசாரது தலையீட்டில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இதேவேளை, தொலைபேசியில் அச்சுறுத்தியமை”, “பேசித் தொந்தரவு செய்தமை” என வைத்தியர்களால் தனித்தனியாக ஐந்து வழக்குகள் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்தநிலையில் குறித்த வழக்குகள் சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் அ.யூட்சன் முன்னிலையில் கடந்த ஜூலை-16 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இருபக்க வாதங்களையும் செவிமடுத்த நீதவான், வைத்தியர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு வைத்தியர் அர்ச்சனாவுக்கு உத்தரவிட்டதோடு ஒவ்வொரு வழக்கிலிருந்தும் தலா 75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவித்தார்.
எதிராளி ஆதாரங்களுடன் வாக்குமூலம் வழங்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரலாம் எனவும் பொலிஸாருக்கு நீதவான் அறிவுறுத்தினர்.
மேலும், சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் சுமூகமான செயற்பாட்டிற்காக, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தாங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கியதுடன் வழக்கை ஜூலை 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்குகள் இன்று (ஜூலை-31) புதன்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி செலஸ்ரின் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது இந்த வழக்கை இணக்கமாக தீர்த்துக்கொள்ளலாமென்ற அர்ச்சுனா தரப்பு கோரிக்கையை ஏனைய வைத்தியர்கள் நிராகரித்துள்ளனர்.
இந்த வழக்கு கடந்த தவணையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆதாரங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வைத்தியர் பொலிஸ் நிலையம் சென்று தான் குற்றம் சாட்டிய நபர்கள் தொடர்பிலான ஆதாரங்களை இதுவரையில் வழங்காதமை தொடர்பிலும் மன்றில் சுட்டிக்காட்டினார்கள்.
எனினும், இன்றைய அமர்விலும் அர்ச்சுனா தரப்பினால் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை.
வைத்தியர்கள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் எனவும், நீதிமன்றத்தில் காலத்தை விரயமாக்காமல், வைத்தியர்கள் தொடர்ந்த வழக்கை இணக்கசபையின் மூலம் இணக்கமாக தீர்க்க விரும்புவதாக அர்ச்சுனா தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனினும், வழக்காளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திருக்குமரன் இதை எதிர்தார். ஒருவர் அவதூறு பரப்பிவிட்டு, இவ்வாறு தப்பிக்கொள்ள முடியாதென சுட்டிக்காட்டினார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடுதியில் அர்ச்சுனா தங்கியிருப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அதனையும் இணக்கப்பாடாக முடிக்க விரும்புவதாக அர்ச்சுனா தரப்பு தெரிவித்தது.
எனினும், அதற்கும் வழக்காளிகள் உடன்படவில்லை.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருக்கிறேன் என்ற போர்வையில் அர்ச்சுனா 3 அறைகளை ஆக்கிரமித்துள்ளதையும், அதில் 3 அறைகளுக்கான கட்டணங்கள், ஏனைய 3 வைத்தியர்களின் சம்பளத்தில் கழிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினர்.
அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அர்ச்சுனா தங்கியுள்ள விடுதியில் இருப்பதாகவும், அதனாலேயே இதுவரை அர்ச்சுனா விடுதியை காலி செய்யவில்லையென்றும் அவர் தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.
நீதிமன்ற கட்டளையை மீறி அர்ச்சுனா பேஸ்புக் லைவ் வீடியோக்கள் வெளியிடுவது சுட்டிக்காட்டப்பட்ட போது, இது தொடர்பில் அர்ச்சுனாவை அறிவுறுத்தியதாகவும், அவரை மேலும் அறிவுறுத்துவதாகவும், இனிமேல் அவ்வாறு செயற்படமாட்டார் என்றும் அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.
அர்ச்சுனா தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை அடுத்த தவணையில் கட்டாயம் முன்வைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு, செம்ரெம்பர் 11ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Leave A Comment