ஆம்ஸ்ட்ராங் கொலை | தொடரும் கைது வேட்டை - 5-வது வழக்கறிஞர் கைது!
தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நொய்டாவில் பதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரதான சந்தேக நபரான ரவுடி சம்போ செந்திலை கைது செய்வதற்கு தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது-52) கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணிப்பேட்டை மாவட்டம்இ காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக மேலும் 5 பேரை கைது செய்தனர். இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். பல்வேறு ரவுடிகுழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல், இக்கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கொலைக்கான மூல காரணம், மூளையாக செயல்பட்டவர், பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மொத்தகுழுக்கள், அதில் உள்ளவர்கள் எனஅனைத்து தகவல்களையும் முழுமையாக சேகரிக்கும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து விரிவான விசாரணை பல்வேறு கோணத்தில் நடைபெற்று வருகிறது.
சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட பிரபல ரவுடிகள் மூன்று பேருக்கு தொடர்பு உள்ளதா என்றும் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக செல்போன் அழைப்புகள், பணப்பரிவர்த்தனைகள், முன் விரோதங்கள் உள்ளிட்ட கோணங்களில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ அவர்களை எல்லாம் அழைக்கப்பட்டு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை முதலில் காவலில் எடுத்த காவல்துறையினர் இரண்டாவது முறையாக பொன்னை பாலு, ராமு என்கிற வினோத் மற்றும் வழக்கறிஞர் அருள் ஆகியோரை காவலில் எடுத்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திருவள்ளூர் மணலி மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரிடம் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
ரவுடி சம்போ செந்திலுக்காக திருவள்ளூர் மணலி பகுதிகளில் சிவா பணம் வசூலித்து வந்ததும் அந்த பணத்தை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.
குறிப்பாக மாமூல் பணத்தை ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக பரிவர்த்தனை செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவாவிடமிருந்து 9 லட்சம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதான ஐந்தாவது வழக்கறிஞர் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில் தொடர்புடையோர் அதிக அளவில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் அவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர் கைதாகும் போது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பல்வேறு முடிச்சுகள் அவிழும் என காவல்துறையினர் நம்புகின்றனர்.
Leave A Comment