லிபியாவில் 20 ஆயிரம் பேர் பலி - உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம்!
வடகிழக்கு லிபியாவில் புயல், கனமழை காரணமாக இரண்டு அணைகள் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாகியுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவின் கிழக்குப் பகுதியை அந்தக் கடலில் உருவான சக்திவாய்ந்த ‘டேனியல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகக் கடுமையாகத் தாக்கியது.
இதனால் பெய்த கனமழையில், அந்தப் பகுதியில் மலையிலிருந்து பாயும் வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை மிகப் பெரிய சப்தத்துடன் வெடித்து உடைந்தது.

அதையடுத்து, அந்த மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த டொ்ணா நகருக்குள் வெள்ளம் வெகுச் சீற்றத்துடன் பாய்ந்து, அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருள்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச் சென்றது.
இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன. இதில், பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது. டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி 18,000 முதல் 20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை டெர்னா நகர மேயர் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Leave A Comment