மனிதப் புதைகுழி: 5 பேரின் உடற்பாகங்கள் மீட்பு!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணியின் போது ஐந்து பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டன.
நேற்று (11) நடைபெற்ற 5 ஆவது நாள் அகழ்வுப் பணி நிறைவில் இதுவரை ஐவரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வடக்கு மாகாணம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த ஜூலை-06 இடம்பெற்ற நிலையில் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில், மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்காணப்பட்டன.
இதையடுத்து குறித்த மனித புதைகுழி பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த அகழ்வு பணியினை தொடர தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31ம் திகதி இடம்பெற்றிருந்தது.
நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அன்றைய தினம் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் செப்டெம்பர்-05 அம் திகதி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மற்றும் கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் செப்டெம்பர்-05 அம் திகதி கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாக அன்றயை தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்க முடியாத நிலையில் மறுநாளான 6ம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
இதற்கமைய, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் கடந்த செப்டெம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமாகின.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின்போது கடந்த வெள்ளிக்கிழமை (08) அன்று மேலும் இரண்டு பெண் போராளிகளினது மனித எச்சங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இந்நிலையல், இதுவரை ஐந்து பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக இருந்தமையினால், சடலங்களை எண்ணிக்கை மற்றும் அதனை அடையாளப்படுத்துவதில் சிரமம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அகழ்வு பணிகளை ஆறாம் நாளாக இன்றைய தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment