கோட்டாபயவை அரியணை ஏற்ற நடந்த சதி; சனல் 4 ஆவணப்படம் வெளியானது!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையே ஏப்ரல்-21 தாக்குதல் என்பதற்கான ஆதாரத்தை வெளியிடும் சனல் 4 ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்கல் நடத்தப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தினமான அன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் ஆகியவற்றில் திருப்பலியும், மட்டக்களப்பிலுள்ள சீயோன் தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையும் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தினர்.

அத்துடன், நாட்டின் பிரசித்தி பெற்ற நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றJ.

மூன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட கோரக்குண்டுத்தாக்குதல்களில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் அங்கவீனமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 வினால் (channel 4) ஆவண படமொன்று ஒளிபரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ் என்ற பெயரில் குறித்த ஆவணப்படம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.35 அளவில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.
இதில் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணி தொடர்பில் தகவலாளரான ஹன்சீர் அஷாட் மௌலானா தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் நிதி மற்றும் ஊடக பொறுப்பாளராக செயற்பட்டிருந்தார்.

அத்துடன் பெயர் வெளிப்படுத்தப்படாத முன்னாள் அரச அதிகாரி ஒருவரும் இதில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் குறித்த ஆவணப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தம்மால் முன்வைக்கப்படும் கருத்துகள் முற்றிலும் உண்மை எனவும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேவுக்கும், ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்த தாக்குதல்தாரிகளுக்கும் இடையில், ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக, தாம் 2018 இல் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தகவலாளரான ஹன்சீர் அஷாட் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தை அடுத்து தம்மிடம் வந்த, சுரேஷ் சாலே, ராஜபக்ஷக்கள் இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் 6 மாதங்களில் தாம் நாட்டை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்ததாக தகவலாளரான ஹன்சீர் அஷாட் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல எனவும் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் இரண்டாவது தகவல் வழங்குனரான பெயரிடப்படாத சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவர், தாக்குதல்தாரிகளுடன் சுரேஷ் சாலியின் உறவு பற்றிய மௌலானாவின் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் குண்டுவெடிப்புகளுக்கு முன்னும் பின்னும் இராணுவ புலனாய்வு காவல்துறை, விசாரணைகளை மீண்டும் மீண்டும் முறியடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
2019ல் கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும், விசாரணையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர், விசாரணை முற்றிலுமாக நாசப்படுத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை முடிவடைந்த போது, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அதன் அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார்.
எனினும் சேனல் 4 க்கு எழுதிய கடிதத்தில், சுரேஷ் சாலி குற்றச்சாட்டுகளை "முற்றிலும் போலியானது" என்றும், எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.
தாக்குதல்தாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் திகதிகளில் அவர் இலங்கையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை செனல் 4 இன் கருத்துக்கு பிள்ளையானோ அல்லது ராஜபக்ச குடும்பத்தினரோ, இதுவரை பதிலளிக்கவில்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று கூறுகிறது.
குறித்த ஆவணப்படம் வெளியான நிலையில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave A Comment