• Login / Register
  • செய்திகள்

    கட்டடக் கலைஞரை மணந்த இளவரசர்; ஜோர்டானில் கோலாகலமாக நடந்த திருமணம்

    ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  இந்த விழா ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்றது.

    மணமகள் ராஜ்வா அல் சைஃப்  நேர்த்தியான வெள்ளை நிற ஆடையை அணிந்து, பட்டத்து இளவரசரின் மறைந்த பெரிய பாட்டிக்காக 1968 ஆம் ஆண்டு தனிப்பயனாக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் ஏ காரில் சஹ்ரான் அரண்மனைக்கு வந்தார். பட்டத்து இளவரசர் ஹுசைன் ராணுவ சீருடையை அணிந்து இருந்தார்.

    2009 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட இளவரசர் ஹுசைன்(28), ஒரு முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த சவூதி கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப்(29)  உடன் திருமணம் செய்து கொண்டார்.

    சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, ராணி ரானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் மன்னர்கள், ராணிகள், இளவரசிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தம்பதிகளின் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. மக்கள் கூட்டம் அலைமோதுவதை தடுக்க நேற்று அரசு விடுமுறையை அரசு அறிவித்து இருந்தது.

    இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், நேற்று வெகுவிமர்சையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஜோர்டான் அரச திருமணத்தின் விருந்தினர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பிடன், பிராந்திய மன்னர்கள், நெதர்லாந்தின் மன்னர் மற்றும் உறுப்பினர்கள் போன்ற  முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Leave A Comment