• Login / Register
  • செய்திகள்

    இபிஎஸ்-க்கு எதிரான சாட்சியாக ஓபிஎஸ்; அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு!

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள விடயம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரர் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கின் சாட்சியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் பல்வேறு தகவல்களை தவறுதலாக கொடுத்துள்ளார் என்றும் குறிப்பாக சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக கூறி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த புகார் மனுவை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைவாணி இந்த மனுத் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு காவல்துறைக்கும்’ உத்தரவிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் புகார் அளித்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதை விசாரணையில் தெரிந்து கொண்ட சேலம் மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர், எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். குறிப்பாக புகார் தாரரான மிலானி கொடுத்த 1,338 பக்க ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர், இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடமும் வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை நடத்திட உள்ளனர்.

    இந்த நிலையில் புகார் தாரரான மிலானி கொடுத்த மனுவில் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற கூறியதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தை சாட்சியாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர்.

    அதாவது எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் போட்டிருந்ததால் அவரையும் இந்த வழக்கின் சாட்சியாக சேர்த்திட புகார்தாரர் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் அவரையும் சாட்சியாக சேர்த்து உள்ளனர்.

    முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சாட்சியாக விசாரிப்பார்களா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

    எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வமும் எதிரெதிர் திசையில் உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஒன்றில் ஓ பன்னீர் செல்வத்தை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment