• Login / Register
  • செய்திகள்

    சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்; வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

    பெங்களூரு மத்திய சிறையில் வி.கே.சசிகலா அடைக்கப்பட்டிருந்த போது சொகுசு வசதி ஏற்படுத்தி கொடுத்த, மூன்று சிறை அதிகாரிகள் மீதான குற்றவியல் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் காவல் உதவி ஆய்வாளராக இருந்த கஜராஜா, லஞ்சம் பெற்று சசிகலாவை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களை சந்திக்க அனுமதித்த குற்றச்சாட்டை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தது.

    அதனை தொடர்ந்து, கஜராஜா, அப்போதைய தலைமைச் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் மற்றும் பெங்களூரு மத்திய சிறையின் துணைக் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் மீது வழக்குத் தொடர மாநில அரசு அனுமதி வழங்கியது.

    இந்த அனுமதியை எதிர்த்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிகையில் இருந்து சிறைத் துறை முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ் நீக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்தவொரு அனுமதியையும் பெறுவதற்கு அவர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    வாதங்களை கேட்டறிந்த பின், கிருஷ்ணகுமார் மீதும், கஜராஜா மீதும் குறிப்பிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அனிதாவிற்கு எதிரான துறை ரீதியான விசாரணை கைவிடப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையும் கருத்தில் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில அரசு வழங்கிய அனுமதியை நீதிமன்றம் ரத்து செய்தது.

    இதேவேளை, சிறைவாசம் அனுபவித்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment