• Login / Register
  • செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் - ஜனக்க ரத்நாயக்க!

    இலங்கையில் தற்போது உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பில்லாத நிலை காணப்படுவதால் புதிய அரசியல் பயணத்தை தொடங்கவேண்டிய கட்டாயம் உள்ளதாகவும், வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

    ஜனக்க ரத்நாயக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவராக செயற்பட்டுவந்த காலப்பகுதியில் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் விதமான அரசாங்கத்தின் முடிவுகளுக்கு ஒத்துழைக்காது செயற்பட்டுவந்தார்.

    இவ்வாறான பின்னணியில் ஜனக்க ரத்நாயக்கவுக்கும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீட்டித்துவந்தது.

    பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினூடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தம் விருப்பப்படி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

    இந்த மோதல் போக்கு அந்த பதவியில் இருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குமளவிற்கு தீவிரமடைந்தது.

    இந்நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக்க ரத்நாயக்கவை, பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை, 46 மேலதிக வாக்குகளால், நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

    இது தொடர்பில், அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர், ஆணைக்குழு செயற்திறனுடன் இருப்பதாக தெரிவித்தார்.

    தற்போது, அவர்களுக்கு இருந்த தடை நீங்கியுள்ளது. எனவே, அவர்கள் தங்களுக்கு அவசியமானதை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

    இதேவேளை, எந்த அரசியல் கட்சியில் இணைந்து நீங்கள், அரசியலில் ஈடுபடுப் போகின்றீர்கள் என ஜனக்க ரத்நாயக்கவிடம் ஊடகவியலாளர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

    இதற்குப் பதிலளித்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், நல்லபெயர் இல்லாதமையால், புதிய பிரவாகத்தை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அரசியல் கட்சி ஒன்று வேண்டும். சுமார் 80 அரசியல் கட்சிகள் நாட்டில் உள்ளன. எனினும், தலைவர்கள் இல்லாதமையே பிரச்சினையாகும்.

    சரியான நபர் தலைமைத்துவத்துக்கு வருவாரேயானால், தம்மைவிட சிறந்த ஒருவர் இருப்பாரேயானால், தாம் அவருக்கு ஆதரவளிப்பதாக ஜனக்க ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என நான் கூறிவிட்டேன்.

    தம்மை பதவி நீக்க ஜனாதிபதியால் முடியாமல் போனது. நாடாளுமன்றத்தில், 113 இற்கு அப்பால் வாக்குகளைப் பெறவேண்டி ஏற்பட்டது.

    எனவே, இங்கு அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை அல்ல. நபர் தொடர்பான பிரச்சினையே உள்ளதாக ஜனக்க ரத்நாயக்க கூறியுள்ளார்.

    Leave A Comment