மன்னர் சார்லஸ் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி? அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு!
ட்ரோன் விமானம் மூலம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து சார்லஸ் தம்பதியர் அவசரமாக நிகழ்விடம் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சார பேரணியின் போது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியில் இருந்து காயத்துடன் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தப்பியிருந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி இடம்பெற்றிருப்பதான எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேனல் தீவுகளில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மன்னர் சார்லஸும் ராணி கமீலாவும் சென்றிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு கமீலா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்து அவரது காதில் ஏதோ சொல்ல, உடனடியாக மற்ற அதிகாரிகளினால் அவர் அங்கிருந்து வேகவேகமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனையடுத்து, மன்னர் சார்லஸும் ராணி கமீலாவும் அருகில் இருந்த ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அப்பகுதியில், ட்ரோன் ஒன்று பறந்ததால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து, கிடைத்த எச்சரிக்கை செய்தி போலியானது என தெரியவரவே, மன்னரும் ராணியும் மீண்டும் தங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்துள்ளனர்.
எனினும், இது குறித்து பக்கிங்காம் அரண்மனை எந்த அதிகாரபூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment