மோடியின் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி; இபிஎஸ் தொடர்பில் அண்ணாமலை சீற்றம்!
பிரதமர் மோடியின் புற முதுகில் குத்திய எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கைத் துரோகி என தெரிவித்த அண்ணாமலை இடைத் தேர்தல் வெற்றிக்காக போன் செய்து பேசிய விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயாராகவில்லை என்றார். மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை.
அதிமுக என்ற கட்சியை தங்களுடைய சுயலாபத்திற்காக சிலர் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் எல்லாம் மாற்றுக் கட்சியை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார்கள். மூன்று அல்லது நான்கு தலைவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்.
நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான். டெல்லியில் பிரதமர் அருகே எடப்பாடி பழனிச்சாமி உட்கார வைத்த பின், சுய லாபத்திற்காக கூட்டணியை விட்டு வெளியேறி விட்டு தேர்தல் முடிவில் பல தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளனர்.
இரண்டாவது பெரிய கட்சி டெபாசிட் இழந்து என்ன சாதனை படைத்துள்ளது. கோயம்புத்தூரில் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று சட்டமன்ற தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக அழிந்து கொண்டிருக்கும் நிலையில் எனக்கு அறிவுரை கூறுவதா?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று எத்தனை தோல்வி. சொந்த ஊர் எனக்கூறி ஈரோடு இடைத்தேர்தலில் நின்ற எடப்பாடி ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஈரோட்டில் வாக்குகள் பிரியக்கூடாது எனக்கூறி என்னிடம் தொலைபேசியில் ஓபிஎஸ் இடம் தேர்தலில் நிற்க வேண்டாம் என கூறுமாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
விக்கிரவாண்டியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை சரி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணிப்பதாக கூறிவிட்டு தற்பொழுது ஈரோட்டில் நடந்தது போன்ற குளறுபடி நடக்கும் என கூறி தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறார்.
இதே தேர்தல் ஆணையம் நடத்தக்கூடிய 2026 சட்டமன்ற பொது தேர்தலையும் அதிமுக புறக்கணிக்குமா என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பாடுகள் இல்லை. அதிமுகவிற்கு அடிமையாக இருக்க பாஜக இல்லை. பிரதமரின் புற முதுகில் குத்தியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.
நம்பிக்கையைப் பற்றி எனக்கும் பாரதி ஜனதா கட்சிக்கும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை காரணம் அவருக்கு அந்த அருகதை இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவரா எடப்பாடி பழனிச்சாமி. ஒரு சேர் போட்டு தலைவன் என்று ஒருவர் உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் அவருடன் தொண்டர்கள் இருக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் கரைய தொடங்கி விட்டார்கள் தேசியம் பக்கம் திரும்ப தொடங்கி விட்டார்கள்.
Leave A Comment