ஹஜ் துயரம்; பலி எண்ணிக்கை மேலும் உயர்வு - அணிவகுக்கும் சடலங்கள்!
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற நிலையில் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த ஹஜ் யாத்திரிகர்களின் சடலங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரின் இதயங்களை கலங்க செய்துள்ளது.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள் வெப்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்றுவருவதாக சவுதி அரேபிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹஜ் யாத்திரிகர்கள் பகல் வேளைகளில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதன் காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாளான ஹஜ் யாத்திரையின் போது அதிகளவானோர் ஒன்று கூடுவதன் காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசல், விபத்து உள்ளிட்ட காரணங்களினால் வருடா வருடம் கணிசமான உயிரிழப்புகள் பதிவாகி வருகின்ற நிலையில் இம்முறை வெப்ப அலை தாக்கத்தின் காரணமாக அதிகளவான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
ஹஜ் என்பது உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றாகும் மற்றும் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வருடாந்திர திருவிழாவாகும்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 14-ல் தொடங்கியது. தியாக திருநாளைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மக்காவில் இந்தாண்டு 18 இலட்சம் பேர் வரை திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தாண்டு சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. வெப்ப தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், மக்காவில் நாள்தோறும் 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகி வருகின்றது.
இதனால் வெப்பம் தாங்க முடியாமல் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள இலங்கை, இந்தியா உள்ளிட்ட 10 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து இம்முறை 1.75 இலட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 90 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவர்களை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடும் வெப்பத்தால் உயிரிழிந்த ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை 1,081 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் பலியாகி உள்ளனர்.
இவர்களில் பலருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் இருந்ததாகவும், வயோதிகம் காரணமாக இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர, கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க, சவுதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு புனித நகரான மக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்ற இலங்கை, ஜோர்தான், எகிப்து, இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் குர்திஸ்தான் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.
இருப்பினும், தற்போது வரை சவுதி அரேபியா அரசுத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஹஜ் யாத்திரை சென்றவர்களில் பலர் மாயமாகி உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உலக வாழ் இஸ்லாமியர்கள் தங்களது வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரையின் போது ஏற்படும் உயிரிழப்புகள் உலகளாவிய கவனத்தை பெற்றுவருகின்ற நிலையில் இவ்வாறு ஹஜ் புனித யாத்திரையின் போது உயிரிழக்கின்றமையை அவர்கள் தமது மனித வாழ்வின் முக்தியாகவே கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment