• Login / Register
  • செய்திகள்

    எம்ஜிஆர் வழியில் வியூகம்; 2026 இல் அதிமுக ஆட்சி - சசிகலா திட்டவட்டம்!

    அதிமுக-வில் தனது என்ட்ரி ஆரம்பமாகியுள்ளதாகவும் விரையில் கட்சி ஒருங்கிணைக்கப்பட்டு 2026 இல் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

    சசிகலா கட்சியில் இருந்து வெளியேறியது வெளியேறியது தான். அதிமுக-வில் அவருக்கு நோ என்ட்ரி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று (17) சென்னையில் தெரிவித்திருந்தார்.
     
    “சசிகலாவும், அவரது குடும்பமும் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்கள். சசிகலாவை மட்டும் ஜெயலலிதா திரும்ப சேர்த்துக் கொண்டார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத சசிகலாவை பொதுமக்கள் எப்படி ஏற்பார்கள். எக்சிட் ஆனவரால் என்ட்ரி கொடுக்க முடியாது. என டி.ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சென்னை போயஸ்கார்டனில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அதிமுக-வில் தனது என்ட்ரி ஆரம்பமாகியுள்ளதாக பதிலடி கொடுத்துள்ளார்.

    இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஜாதி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும், அதிமுகவில் தாம் என்ட்ரி ஆகிவிட்டதாகவும், விரைவில் அதிமுக ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    2026ல் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் சசிகலா திட்டவட்டமாக கூறினார். மேலும், ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதாகவும், தற்போது இருக்கும் தலைவர்கள் ஜாதி அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

    இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக அதிமுகவை உருவாக்கியதாக குறிப்பிட்ட சசிகலா, இன்றைக்கு அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக கூறினார்.

    கட்சியிலிருந்து யாரையும் நீக்க கூடாது என்பதில் எம்ஜிஆர் கவனமாக இருப்பார் என்றும், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கான சீருடை தாமதமாக வழங்கப்படுவதாகவும், போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திமுகவின் நிலைப்பாடு குறித்து விமர்சித்த சசிகலா, இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றம்சாட்டினார்.

    மேலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணிப்பதற்கு திமுக தான் காரணம் என்றும், கொடநாடு வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் பட்சத்தில், அதில் உள்ள உண்மைகள் குறித்து மக்களுக்கு தெரியவரும் எனவும் அவர் கூறினார்.

    Leave A Comment