விஜய் கட்சியில் பதவி வேண்டுமா? இதைச் செய்தாலே போதும் - புஸ்ஸி ஆனந்த் தகவல்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் பதவி வேண்டுமானால் ஒவ்வொரு தொகுதியிலும் கடினமாக உழைத்து தவெக கொடியை பறக்கவிட வேண்டும் எனவும் கட்சிக்காக உழைப்பவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் எனவும் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்கு வைத்து தீவிர செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுகள் ஒருபக்கம் பரபரத்துக் கொண்டிருக்க முதல் மாநாட்டுக்கான எதிர்பார்ப்பும் தொண்டர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்கம் அப்படியே தமிழக வெற்றி கழகமாக அரசியல் கட்சியாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட அரசியல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உழைப்பவர்களுக்குத்தான் பதவி என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருப்பூரில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் முத்தன்னம்பாளையத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டதில் திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு, விஜய்யே வந்தது போல தள்ளுமுள்ளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து நிர்வாகிகளிடம் பேசிய ஆனந்த், திருப்பூர் மாவட்ட எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கவேண்டும் என்றார்.
போஸ்டர் ஒட்டியும் கொடி பிடித்தும் கட்சிக்காக உழைப்பவர்கள், கைவிடப்பட மாட்டார்கள் என கூறிய அவர், திருப்பூருக்கு விரைவில் விஜய் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கரூரில் பேசிய ஆனந்த், “வரும் 2026இல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் இருக்கையில் விஜய்யை அமர வைக்க வேண்டும் என்பதே நோக்கம், அதற்காக அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும். இன்னும் 18 மாதங்கள் தான் இருக்கிறது” என தெரிவித்தார்.
Leave A Comment