• Login / Register
  • செய்திகள்

    கழிப்பறைக்குள் அடுத்தடுத்து மயங்கி சரிந்த மூவர் பலி - ஆபத்தான நிலையில் ஒருவர் - புதுவையில் பரபரப்பு!

    கழிப்பறைக்கு சென்றவர்கள் அடுத்தடுத்து மயங்கி சரிந்த நிலையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ள சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு வீட்டின் கழிவறை வழியாக வெளியேறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் பலியாகினர். இவர்களில் ஒருவர் 15 வயது சிறுமி.

    புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியின் தெருக்களில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு வீட்டின் கழிவறையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் குறித்த அநர்த்தம் ஏற்பட்டுள்ளது.

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது பாட்டி செந்தாமரை (72). இவர் இன்று (11) காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து உடனே அவரது மகள் காமாட்சி (55), செந்தாமரையை தூக்கச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

    இதப் பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

    இது குறித்து புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதன் பேரில் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே செந்தாமரையும் காமாட்சியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாக்கியலட்சுமி வீட்டில் கழிப்பறையில் இருந்து விஷவாயு வெளியேறிதால் 2 பேரும் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும், அந்தப் பகுதியில் விஷவாயு பரவுகிறதா என்பது குறித்து உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, விஷவாயு பரவியதால் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராணி என்ற 15 வயது சிறுமியும் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை, போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதன்மூலம் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் வாடிகாலை சரி செயயும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    கழிவுநீர் வடிகாலை சரி செய்யும் வரை புதுநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டாம் என உழவர்கரை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதேவேளை விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், இறந்த இரு பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    Leave A Comment