• Login / Register
  • செய்திகள்

    அனுரவும் தமிழரசு கட்சியினருடன் யாழில் விசேட சந்திப்பு!

    நடைபெற உள்ள அரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக களத்தில் உள்ள அனுரகுமார திசநாயக்க தமிழரசு கட்சி பிரமுகர்களுடன் யாழ்ப்பாணத்தில் இன்று (11) விசேட சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்றைய தினம் (10) யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் தமிழரசு கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் போட்டி வேட்பாளராக உள்ள அனுரகமார திசநாயக்கவும் சந்தித்துள்ளமை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    நடைபெற உள்ள அரசு தலைவர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுவதாக அறிக்கப்பட்டிருந்தது.

    அதேபோன்று தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுர குமார திசநாயக்க போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    ஆளுங்கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்பது இன்றுவரை அறிவிக்கப்படா நிலை காணப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன தரப்புடன் இணக்கப்பாடு காணப்பாடத நிலையில் இழுபறி நிலவி வருகிறது.

    காலம் காலமாக தென்னிலங்கை வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் பதவிக்கு வந்தபின்னர் அதனை காற்றில் பறக்கவிடுவதுடன் தமிழர்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றமை வரலாற்று பாடமாகும்.

    இதனை அடிப்படையாக கொண்டு இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஊடாக தமிழர்களது வாக்குகளை திரட்டுவது என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தரப்பு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

    தமிழரசு கட்சியின் சிறிதரன் தரப்பு தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறது. அதேநேரம் சுமந்திரன் தமிழ் பொதுவேட்பாளர் முயற்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் தென்னிலங்கை வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டுடன் வலம்வருகின்றார்.

    இப்பின்னணியில் தமிழரசு கட்சி தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் தெளிவான முடிவினை கட்சி ரீதியாக இன்னும் அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று  யாழ்ப்பாணத்தில் இன்று (11) நடைபெற்றது.

    யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர்.

    யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச்சந்திப்பு இடம்பெற்றது.

    இதன் போது பிரதானமாக ஐனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

    இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம், ஊடகப் பேச்சாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

    அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment