• Login / Register
  • செய்திகள்

    2026 இல் நாம் தமிழர் ஆட்சி - சீமான் உறுதி!

    நடைபெற்று முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் 8.2 விழுக்காடு வாக்குகளை பெற்று மாநிலக்கட்சியாக கிடைத்த அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரும் சாதனை

    "இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை" என்ற இலட்சிய பயணத்தில் நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரும் சாதனையாக 36 இலட்சம் வாக்குகளை பெற்று (8.19%) மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

    திராவிட, தேசிய கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்ற நிலையான கொள்கையுடன் அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி நடப்பு மக்களவைத் தேர்தலிலும் தனித்து களமிறங்கியதுடன் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டது.

    மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சமூகப்போராளிகள் என சமூகத்தின் நன்மதிப்புடனும் கல்வி பின்புலத்துடனும் உள்ளவர்களை வேட்பாளர்களாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார் சீமான்.

    வாரிசு அரசியலின் ஆதிக்கம் ஏனைய கடசிகளில் வேரூன்றி காணப்படும் நிலையில் மக்கள் சேவைக்கு தகுதியானவர்களை தேடித் தேடி கண்டுபிடித்து வேட்பாளர்களாக களமிறக்கியிருந்தமை பலராலும் பாராட்டப்பட்ட விடயமாகும்.

    ஏற்படுத்தப்பட்ட தொடர் தடைகள்...

    நாம் தமிழர் கட்சியின் சின்னமாக வலுவாக மக்கள் மத்தியில் நிலைபெற்றிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தலுக்கு மிக கிட்டியதாக பறிக்கப்பட்டிருந்தமை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

    இருப்பினும் தளர்ந்துவிடாத நாம் தமிழர் கட்சியினர் சின்னமே இன்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் மிக குறுகிய நாடகளில் ஒலிவாங்கி சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தியிருந்தனர்.

    தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், அரசியல் ஆய்வாளர்களது கணிப்புகள் நாம் தமிழர் கட்சி 10 சதவீகித வாக்குகளுக்கு அதிகமான வாக்குகளை பெறும் என ஆணித்தரமாக தெரிவித்திருந்தனர்.

    சின்னம் பறிப்பு உள்ளிட்ட காரணங்களினால் சிறு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் திராவிட, தேசிய கட்சி கூட்டணிகளுக்கு சாவலளிக்கும் வகையில் தனித்து நின்று 8.19 சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளமை சாதாரண விடயமாக கடந்து சென்றுவிட முடியாது என்பதை அரசியல் அவதானிகள் எடுத்தியம்பி வருகின்றனர்.

    மாநில கட்சியாக அங்கீகாரம்

    இந்நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது.

    தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெறும் 6.58% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்தமுறை 8% மேல் வாக்குகளை பெற்றுள்ளது.

    மூன்றாவது இடம்

    அதுமட்டுமன்றி கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகபட்டினம், திருச்சி  மற்றும் புதுவை உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பெற்று அதிமுக, பாஜக கூட்டணியை பின்தள்ளி ஆச்சரியமளித்திருந்தது.

    12 மக்களவைத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள்

    அத்துடன் சிவகங்கை, ஸ்ரீபெரும்புத்தூர், நாகபட்டினம், தென்காசி, மயிலாடுதுறை, திருவள்ளுர், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 12 மக்களவைத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் மக்கள் செல்வாக்கை நாம் தமிழர் கட்சி நிலைநிறுத்தியுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எழிலரசி ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 412 வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    நீண்டகாலமாக அரசியல் களத்தில் உள்ள மதிமுக, பாமக, விசிக, இடதுசாரி கட்சிகள் போன்ற கட்சிகள் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம்கண்டு வருகின்ற நிலையில் அவை பெறாத வாக்கு சதவிகிதத்தை தனித்து நின்று நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளமை பெரும் அரசியல் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

    2026 இல் நாம் தமிழர் ஆட்சி

    இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சி அதிகாரத்தை நாம் தமிழர் கட்சி கைப்பற்றும் என, தேர்தல் முடிவுக்கு பின்னர் அக்கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அதில் மேலும் தெரிவிக்கையில்,

    அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.

    ‘தமிழ்த்தேசியம்’ எனும் உயரிய தத்துவ முழக்கத்தை எம் முன்னோர்களும், மூத்தோர்களும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தூக்கிச் சுமந்தபோதும், அக்கருத்தியல் முழக்கம் வெகுமக்கள் வடிவம் பெறாமலேயே இருந்தது. அந்தப் போதாமையையும், குறைபாட்டையும் முற்றிலும் போக்கி, தமிழ்த்தேசியத்தை வெகுமக்கள் அரசியலாக்கி, தேர்தலிலே களம் கண்டது நாம் தமிழர் கட்சி.

    2016ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது தமிழினஅரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்! சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல அடக்கு முறைகளைத் தாண்டியும், சாதி, மதம், மது, பணம் எனப் புரையோடிப்போன சமூகத்தீங்குகளைக் கடந்தும் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும்.

    இத்தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 35,60,485 மதிப்புமிக்க வாக்குகளைத் தந்து, நாம் தமிழர் கட்சியைப் பெரும் அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்த தாய்த்தமிழ்ச் சொந்தங்கள், போற்றுதற்குரிய பெருமக்கள், வேட்பாளர்களாகக் களத்தில் நின்ற எம் உடன்பிறந்தார்கள், எல்லாவுமாகத் துணைநின்ற அன்பிற்கினிய உறவுகள், உயிரைக் கொடுத்து உழைத்த உயிருக்கினிய தம்பி, தங்கைகள் என அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளையும், உளப்பூர்வமான அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Leave A Comment