• Login / Register
  • செய்திகள்

    சீமான், திருமாவுக்கு விஜய் வாழ்த்து - மக்களின் நம்பிக்கையை பெற்றதாக தெரிவிப்பு!

    நாம் தமிழர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்களான சீமான், திருமாவளவன் ஆகியோருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழத்து தெரிவித்துள்ளார்.

    நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மாநில கட்சிகளாக அங்கீகாரத்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு விஜய் இவ்வாறு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி தனித்து நின்று 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

    சின்னம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு தடைகளை கடந்து புதிய சின்னத்துடன் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட 12 வேட்பாளர்கள் ஒரு லட்சத்து அதிக வாக்குகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

    அத்துடன் ஐந்து தொகுதிகளில் அதிமுக, பாஜக கூட்டணிகளை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பெற்றிருந்தது.

    இதேவேளை, விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து தனி சின்னத்தில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியுள்ளது.

    இந்நிலையில், மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    "நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என தமிழக வெற்றி கழகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்.

    Leave A Comment