• Login / Register
 • செய்திகள்

  நாதக மாநில கட்சியாக அங்கீகாரம்; தனித்து நின்று மாஸ் காட்டிய சீமான்!

  "இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை" என்ற இலட்சிய பயணத்தில் நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரும் சாதனையாக 36 இலட்சத்துக்கு அதிக வாக்குகளை பெற்று (8.19%) மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

  நடைபெற்று முடிந்த இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் 8.19 ஆக உயர்வடைந்ததன் மூலம் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை அக்கட்சி பெற்றுள்ளது.

  திராவிட, தேசிய கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்ற நிலையான கொள்கையுடன் அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி நடப்பு மக்களவைத் தேர்தலிலும் தனித்து களமிறங்கியதுடன் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டது.

  மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சமூகப்போராளிகள் என சமூகத்தின் நன்மதிப்புடனும் கல்வி பின்புலத்துடனும் உள்ளவர்களை வேட்பாளர்களாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார் சீமான்.

  வாரிசு அரசியலின் ஆதிக்கம் ஏனைய கடசிகளில் வேரூன்றி காணப்படும் நிலையில் மக்கள் சேவைக்கு தகுதியானவர்களை தேடித் தேடி கண்டுபிடித்து வேட்பாளர்களாக களமிறக்கியிருந்தமை பலராலும் பாராட்டப்பட்ட விடயமாகும்.

  நாம் தமிழர் கட்சியின் சின்னமாக வலுவாக மக்கள் மத்தியில் நிலைபெற்றிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தலுக்கு மிக கிட்டியதாக பறிக்கப்பட்டிருந்தமை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

  இருப்பினும் தளர்ந்துவிடாத நாம் தமிழர் கட்சியினர் சின்னமே இன்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் மிக குறுகிய நாடகளில் ஒலிவாங்கி சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தியிருந்தனர்.

  தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், அரசியல் ஆய்வாளர்களது கணிப்புகள் நாம் தமிழர் கட்சி 10 சதவீகித வாக்குகளுக்கு அதிகமான வாக்குகளை பெறும் என ஆணித்தரமாக தெரிவித்திருந்தனர்.

  சின்னம் பறிப்பு உள்ளிட்ட காரணங்களினால் சிறு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் திராவிட, தேசிய கட்சி கூட்டணிகளுக்கு சாவலளிக்கும் வகையில் தனித்து நின்று 8.19 சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளமை சாதாரண விடயமாக கடந்து சென்றுவிட முடியாது என்பதை அரசியல் அவதானிகள் எடுத்தியம்பி வருகின்றனர்.

  இந்நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது.

  தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.

  கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெறும் 6.58% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்தமுறை 8% மேல் வாக்குகளை பெற்றுள்ளது.

  அதுமட்டுமன்றி கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகபட்டினம், திருச்சி  மற்றும் புதுவை உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பெற்று அதிமுக, பாஜக கூட்டணியை பின்தள்ளி ஆச்சரியமளித்திருந்தது.

  அத்துடன் சிவகங்கை, ஸ்ரீபெரும்புத்தூர், நாகபட்டினம், தென்காசி, மயிலாடுதுறை, திருவள்ளுர், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 12 மக்களவைத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் மக்கள் செல்வாக்கை நாம் தமிழர் கட்சி நிலைநிறுத்தியுள்ளது.

  நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எழிலரசி ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 412 வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நீண்டகாலமாக அரசியல் களத்தில் உள்ள மதிமுக, பாமக, விசிக, இடதுசாரி கட்சிகள் போன்ற கட்சிகள் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம்கண்டு வருகின்ற நிலையில் அவை பெறாத வாக்கு சதவிகிதத்தை தனித்து நின்று நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளமை பெரும் அரசியல் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

  தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  இதன்படி, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக அதிகபட்சமாக 26.93 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது.

  பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 20.46 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளன.

  அதே நேரம் பாரதிய ஜனதா கட்சி 11.24 சதவிகித வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

  தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 10.67 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது.

  அதேபோல தேமுதிக 2.59 சதவிகித வாக்குகளும்,

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2.52 சதவிகித வாக்குகளும்,

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.15 சதவிகித வாக்குகளும்,

  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 1.17 சதவிகித வாக்குளும்,

  பகுஜன் சமாஜ் கட்சி 0.31 சதவிகித வாக்குகள் பெற்றுள்ள நிலையில்,

  தமிழகத்தில் நோட்டா 1.06 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.

  தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள், சுயேச்சைகள் சேர்த்து 20.89 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  Leave A Comment