• Login / Register
  • செய்திகள்

    கூண்டோடு ராஜிநாமா; ஜூன்-08 இல் நேருவின் சாதனையை சமன் செய்வாரா மோடி?

    18 ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ள நிலையில் குறித்த ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18 ஆவது மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது.

    கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வென்றிருந்தது.

    இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.

    தேர்தர் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது.

    தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையிலும், கூட்டணிக் கட்சிகளுடன் கைகோத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

    கூண்டோடு ராஜிநாமா செய்த மோடி...

    இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவையை கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார்.

    இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    ”பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார். மத்திய அமைச்சர்கள் குழுவுடன் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.

    குடியரசுத் தலைவர் மோடியின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதுடன், புதிய அரசு அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு பிரதமரையும் மத்திய அமைச்சர்கள் குழுவையும் கேட்டுக் கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் கிங் மேக்கர்களாக உருவாகியுள்ளனர்.

    இந்தியா கூட்டணியின் எழுச்சி...

    பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியாக இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்த நிலையில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

    காங்கிரஸ் 99, சமாஜவாதி 39, திரிணமூல் காங்கிரஸ் 29, திமுக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    கடந்த தேர்தலில் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 99 தொகுதிகளில் வென்றுள்ளது.

    இந்தியா கூட்டணி சார்பில் குறித்த இருவருடனும் ஆதரவு கோரி பேச்சுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இருப்பினும் குறித்த இரு தலைவர்களும் தேசிய ஜனநாய கூட்டணியில் தொடர்வதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இருப்பினும் இறுதி நேரம் வரை மாற்றங்கள் நிகழும் வாய்ப்பினையும் மறுத்துவிட முடியாது எனற கருத்து அரசில் அரங்கில் நீட்டித்து வருகிறது.

    நேருவின் சாதனையை சமன் செய்வாரா மோடி...?

    இதேவேளை, ஜூன் 8 ஆம் தேதி பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதமா் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தொடா்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை பிரதமா் மோடி சமன் செய்யவிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment