பச்சிளம் சிசுவை கைவிட்டு தப்பியோடிய சிறுமி மீட்பு; தாய்மை அடையச் செய்த இளைஞனும் கைது!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த நிலையில் பச்சிளம் சிசுவை கைவிட்டு தப்பியோடி தலைமறைவான பாடசாலை சிறுமி மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமியை தாய்மை அடையச் செய்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை தாய்மை அடையச் செய்த சந்தேக நபரை நெல்லியடி பொலிசார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(13) இரவு கைது செய்துள்ளனர்.
வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் அவரது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக கடந்த 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த சிறுமிக்கு அன்றயை தினம்(10) இரவே குழந்தை பிறந்த நிலையில் பிறந்து ஒரு நாளே ஆகாத பச்சிளம் சிசுவை அநாதரவாக விட்டுவிட்டு மறுநாள் 11 ஆம் திகதி காலை முதல் குழந்தையை பிரசவித்த சிறுமியும் அவரது தாயாரும் தலைமறைவாகியிருந்தனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு தலைமறைவாகி உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தலைமறைவாக இருந்த 15 வயதுடைய சிறுமியான தாயை நெல்லியடி பொலிசார் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
இந் நிலையில் குறித்த சிறுமியை தாய்மை அடைய செய்ய காரணமாக இருந்த மல்லாவியை சேர்ந்த 25 வயது உடைய இளைஞர் நெல்லியடிப் பொலிசாரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment