• Login / Register
  • மேலும்

    நிலவில் ஆக்சிஜன் இருப்பது உறுதி; சல்ஃபர் தனிமங்களும் கண்டறியப்பட்டன - இஸ்ரோ!

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை தொட்டது முதல் லேண்டன் மற்றும் ரோவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நோக்கி ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் நிலையில் நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன் இருப்பதும், சல்ஃபர் தனிமம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    நிலவில் கால்பதித்த முன்னோடி நாடுகளாக அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா விளங்கி வந்தாலும் சமகாலத்தில் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிலவு தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்கும் நாடாக இந்தியாவுக்க பெருமை சேர்த்துள்ளது சந்திரயான்-3 வெற்றி.

    நிலவின் தென் துருவம் தொடர்பான ஆய்வுத் தகவல்களுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒட்டுமொத்த உலகமும் பின்தொடரும் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

    தரையிறங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு லேண்டரில் இருந்த ‘பிரக்யான்’ ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

    தரை இறங்கிய இடத்தில் இருந்தபடி லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ரோவரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், ரோவரில் உள்ள லிப்ஸ் சாதனம் மூலம், நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் இருப்பதை இஸ்ரோ கண்டறிந்துள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,

    “ரோவரில் உள்ள லிப்ஸ் (Laser-Induced Breakdown Spectroscope-LIBS) ஆய்வுக் கருவியின் மூலம் தென்துருவத்துக்கு அருகே உள்ள நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் (கந்தகம்) தனிமம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல, அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான், குரோமியம் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹைட்ரஜனைக் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த லிப்ஸ் சாதனம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வு தொடர்பான வரைபடத்தையும் இஸ்ரோ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. லேண்டர், ரோவர் ஆகிய கலன்கள் வரும் செப். 3-ம் தேதி வரை நிலவில் ஆய்வு மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment