கோட் படக்குழு இலங்கையில்; வருவாரா விஜய்? வெளியான புகைப்படங்கள்!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையில் ஆரவாரமின்றி இடம்பெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகி இலங்கை வாழ் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியலுக்கு செல்லும் நோக்கில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்த உள்ளதாக அறிவித்தார்.
முன்னதாக ஏற்றுக்கொண்ட அடிப்படையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' திரைப்படத்திலும் அதற்கு அடுத்ததாக ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த இரண்டு படங்களுமே விஜயின் இறுதி படங்களாகும் என்பதால் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில், கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இயக்குநர் வெங்கட் பிரபு படப்பிடிப்பு நடத்தும் இடங்களை பார்வையிட்டு திரும்பியிருந்தார். நடிகர் விஜயும் இலங்கை வருவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
முன்னதாக தமிழக மீனவர்களுக்கு ஆதரவான கூட்டமொன்றில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடிகர் விஜய் பேசியிருந்தார். குறித்த காணொளி பதிவு அவரது இலங்கை வருகையை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் மீள் பதிவு செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இலங்கை வந்தால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த சிங்கள அமைப்புகள் சில தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து குறித்த படப்பிடிப்பு இந்தியாவின் - கேரள மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்திருந்தனர்.
இதற்கிடையில், தற்போது இலங்கையில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்யும் இந்தப் படப்பிடிப்பில் இணைவதற்காக இலங்கை வருவாரா என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Leave A Comment