• Login / Register
  • கட்டுரைகள்

    ஆண்டுக்கு 5.4 லட்சம் பேரின் உயிரை எடுக்கும் பீட்சா, பர்கர்: மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவல்

    அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பீட்சா, பர்கர், பிரென்ச் பிரைஸ், கேக், போன்ற உணவுகளில் அதிகம் உள்ள  டிரான்ஸ்-ஃ பேட்டி ஆசிட் எனும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களை அதிகமாக சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 

    அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பீட்சா, பர்கர், பிரென்ச் பிரைஸ், கேக், சாக்லேட், பப்ஸ், பிரைடு சிக்கன், பிரெட்ஸ் ஆகியவற்றில் இந்த நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவுகளை நீண்ட நாள் கெட்டுப்போகாமல் பதப்படுத்திவைக்க உதவுகிறது. 

    இந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாக இதய நோய் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

    இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். 

    அதில், 'வணிக ரீதியாக தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், பொதுவாக பேக் செய்யப்பட்ட உணவுகள், கேக் உள்ளிட்ட பேக்கிங் உணவுகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றில் காணப்படுகிறது. இந்த உணவுகளைச் சாப்பிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 5,40,000 பேர் இறக்கின்றனர். நிறைவுறா கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது இறப்பு அபாயத்தை 34%, இதய நோயால் ஏற்படும் இறப்புகளை 28% அதிகரிக்கிறது. 

    இது கொழுப்பு அளவுகளில் மாற்றத்தினால் ஏற்படும் விளைவாக இருக்கலாம்: இது கெட்ட கொழுப்பை( (குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம்) அதிகரித்து நல்ல கொழுப்பின்(உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம்) அளவைக் குறைக்கிறது.

    உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில்  4.6% கரோனரி இதய நோய் இறப்புகள், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

    உணவுப் பொருட்களில் நிறைவுறா கொழுப்பு அமிலங்களின் அதிகபட்ச வரம்பு  2 சதவீதத்துக்கு மிகாமல் குறைக்க சட்டங்கள் திருத்தப்பட்டு 2022, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன' என்று தெரிவித்தார்.


    Leave A Comment