• Login / Register
  • கட்டுரைகள்

    இடைக்கால நிர்வாகமே சாத்தியமானது - சி.அ.யோதிலிங்கம்!

    வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது போல தமிழ் அரசியல் தலைவர்களும் முருங்கை மரத்தில் ஏறுவதில் விடாப்பிடியாக உள்ளனர். தலைவர்கள் என்ன தான் முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் சிங்கள அரசைக் கைளாளுகின்ற போதும், சர்வதேச அரசியலைக் கைளாளுகின்ற போதும் ஒருங்கிணைந்து செயற்படுங்கள் என தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வேண்டி நிற்கின்றனர்.

    தமிழ்  கட்சிகள் இவ் வேண்டுகோளை  ஒரு சதத்திற்கு கூட கணக்கெடுக்கவில்லை. தொடர்ந்தும் கட்சி அரசியலிலும் தேர்தல் அரசியலிலுமே கருத்தாக உள்ளனர். ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு கட்சி செல்லவேயில்லை. அது தன்னை 24 கரட் என நினைத்துக் கொண்டிருக்கின்றது. மற்றறையவை பேச்சுவார்த்தைக்கு சென்றன. ஆனால் ஒருங்கிணைந்த செயற்பாடு மருந்துக்குக்கூட இருக்கவில்லை.

    கடந்த 15 ம் திகதி திங்கட்கிழமை அதிகாரப்பகிர்வு விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சியும், குத்துவிளக்குக் கட்சிகளும் விக்கினேஸ்வரனின் கட்சியும் சந்திப்பில் கலந்து கொண்டன. ஜனாதிபதிக்கு முன்னாலேயே சந்தி சிரிக்கக் கூடியதாக தமக்கிடையேயான முரண்பாடுகளை அவைமேடையேற்றின விக்கினேஸ்வரன் மாகாண சபைத்தேர்தல் நடைபெறும் வரை மாகாண இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைக்கும் யோசனை ஒன்றை முன்வைத்தார். ரணிலும் அதற்கு சாதமாகவே கருத்துக்களை தெரிவித்தார். இது ரணிலும் விக்கினேஸ்வரனும் பேசித்தீர்மானித்த யோசனையாகவும் இருக்கலாம் அல்லது  புலம்பெயர்தரப்பின் யோசனைகள் விக்கினேஸ்வரனுக்கூடாக வந்திருக்கலாம். இவ் யோசனைகள் அடங்கிய வரைபு தமிழரசுக்கட்சிக்காரர்களுக்கும், குத்துவிளக்குக்காரர்களுக்கும் முன்கூட்டியே வழங்கப்பட்டது. அவர்களுக்குள் முரண்பாடு இருப்பின் இவ்யோசனையை இப்போது கொண்டுவர வேண்டாம் என விக்கினேஸ்வரனிடம் வேண்டுகோளை விடுத்திருக்கலாம்.

    அவை எவற்றையும் மேற்கொள்ளாமல் ரணிலுக்கு முன்னாலேயே அதனை முழுமையாக நிராகரித்தனர். புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும், மாகாண சபைத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையே இரு தரப்பும் முன்வைத்தன. பெயருக்கு கட்சியினரிடம் ஆலோசித்த பின் கருத்துக்களைக் கூறுவதாகக் கூட கூறவில்லை இடைக்கால நிர்வாகக் கோரிக்கை புதிதாக முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல. புலிகள் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அதற்கான வரைபையும் சமர்ப்பித்திருந்தனர். கஜேந்திரகுமாரும் இது போன்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். இக்கட்டுரையாளர் உட்பட பல கருத்துருவாக்கிகளும் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

    சர்வதேச ரீதியாகவும் விடுதலைக்காக போராடுகின்ற சமூகங்கள்; தீர்வு வரும் வரை இடைக்கால நிர்வாகத்தை கோரி வந்துள்ளன. பல நாடுகளில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. சூடான் இதற்குப்பிந்திய உதாரணம் ஆகும்.

    புலிகளும் ஏனையவர்களும் முன்வைத்த இடைக்கால நிர்வாகக் கோரிக்கை விக்கினேஸ்வரன் முனவைத்த கோரிக்கையைப் போன்றதல்ல. அது முழு வடக்குக் கிழக்குக்குமான கோரிக்கை. விக்கினேஸ்வரன் மாகாண சபை மட்டத்திலேயே இக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஒரு வேளை தான் முதலமைச்சராகும் யோசனையும் கூட இருந்திருக்கலாம் தேர்தலும், புதிய யாப்பு முயற்சியும் இப்போதைக்கு சாத்தியமல்ல. ரணிலும் மொட்டுக்கட்சியினரும் தேர்தல் ஒன்றுக்கு தயாராகவில்லை. தேர்தல் நடைபெற்றால் இரு தரப்பினரின் இருப்பும் பூச்சியம் தான்.  ரணிலுக்கு பின்னால் நின்று வழிநடத்தும் மேற்குலகமும், இந்தியாவும் கூட ரணிலைப் பலவீனப்படுத்த ஒரு போதும் விரும்பமாட்டா. அவற்றைப் பொறுத்தவரை ரணில் அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் சொத்து. ரணிலை இழக்க அவை தயாரில்லை மறுபக்கத்தில் சர்வதேச நாணயநிதியம் எவ்வழிகளிலாவது இனப்பிரச்சினையைத் தீருங்கள் என வலியுறுத்தியுள்ளது. இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக குறைக்கும்படியும் கேட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான வேதனத்தில் 46 வீதம் படையினருக்கே வழங்கப்படுகின்றது. இந்தச் செலவைக் குறைக்கும் தேவையும் அரசிற்கு உள்ளது.

    அதிகாரப் பகிர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பிற்கு தென்னிலங்கை தயாராவில்லை. அதற்குரிய அரசியல் கலாச்சாரம் இன்னமும் அங்;கு துளி கூட வளரவில்லை. 13 வது திருத்தத்தை  கூட நடைமுறைப்படுத்த    தயாரில்லாத தென்னிலங்கையிடம் சமஸ்டி யாப்பை இப்போதைக்கு எதிர்பார்க்கவே முடியாது. புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் விருப்பும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடம் இல்லை.

    மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தமிழ் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூற முடியாது. வடக்கில் இவை பயன்களைத்தந்தாலும் கிழக்கில் மோசமான நிலையையே உருவாக்கும். கிழக்குத்தமிழ் மக்களிடம் பிளவுகள் அதிகரிக்கும். முஸ்லீம் தரப்பு மாகாணசபை அதிகாரத்தை பெறக்கூடாது என்பதற்காகவே கிழக்கில் ஒரு பகுதித்தமிழர்கள் சிங்கள கட்சிகளுடன் இணைந்து மாகாண அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பர்;. இது பெரும்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியம் கரைவதற்கான வாய்ப்புக்களையே உருவாக்கும். பிள்ளையானின்; கட்சி மேல்நிலையாக்கம் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்.

    இன்று சாத்தியம் இல்லாவிட்hலும் எதிர்காலத்திலாவது தாயக ஒருமைப்பாட்டைப் பேணுகின்ற தீர்வு அவசியம். தாயக ஒருமைப்பாடு இல்லாமல் தமிழ் மக்களின் கூட்டிருப்பையும், கூட்டு உரிமையையும் , கூட்டடையாளத்தையும் ஒரு போதும் பேண முடியாது எனவே தாயக ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற செயற்பாடுகளுக்கு இப்போது போகாமல் இருப்பது நல்லது. தற்போதைய நிலையில் தாயக ஒருமைப்பாட்டை பேணுவதற்கான நிலைப்பாடு இடைக்கால நிர்வாகம் தான்.

    தவிர ஆக்கிரமிப்புக்களை நிறுத்த வேண்டும். போரினால் பாதிக்கபட்ட மக்களின் நலன்களைப் பேணுதற்கு முயற்சிக்க வேண்டும். சகல வழிகளிலும் தமிழ்த்தேசத்தை வளர்க்க வேண்டும். தற்போதைய நிலையில் இதற்கு உதவப்போவதது இடைக்கால நிர்வாகம் தான். தற்போது சர்வதேசத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைக்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. இடைக்கால நிர்வாகம் அதனையும் திறக்கக்கூடியதாக இருக்கும். சுருக்கமாகக் கூறின் அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் யாப்பு சாத்தியமல்ல. தேர்தல் நடைபெறக்கூடிய நிலை இல்லை புவிசார் அரசியல்காரர்களும், பூகோள அரசியல்காரர்களும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு தயாராக இல்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு முன்னெப்போதையும் விட தங்களை தாங்களே ஆட்சி செய்கின்ற நிர்வாகம் ஒன்று தேவையாக உள்ளது. இடைக்கால நிர்வாகம் தவிர வேறு தெரிவு தற்போதைக்கு இல்லை என்றே கூறலாம்.

    இடைக்கால நிர்வாகத்தை ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொண்டே பெருமளவிற்கு உருவாக்கலாம். பாராளுமன்ற தீர்மானங்கள் கூட பெரிதளவிற்கு தேவைப்படாது. தேவைப்படின் மொட்டுக்கட்சிக்காரர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து சம்மதிக்க வைக்கலாம.; சர்வதேசத்தின் கத்தி மொட்டுக்கட்சியை நோக்கி இருப்பதால் மொட்டுக்கட்சியினர் தமது இனவாத்தை அடக்கி வாசிக்கவே முற்படுவர்.

    தற்போது எழும் கேள்வி தமிழ் மக்களுக்கேற்ற இடைக்கால நிர்வாகத்தை சாத்தியமாக்க என்ன செய்யலாம், என்பதே இதில் முதலாவது இது பற்றிய உரையாடலைத் தொடக்கி வைப்பதே! குறிப்பாக இடைக்கால நிர்வாகத்தின் உள்ளடக்கம் பற்றி வலுவான கலந்துரையாடலை நடாத்த வேண்டும். சர்வதேச ரீதியாக இடைக்கால நிர்வாக அனுபவங்களையும் சர்வதேச மட்டத்தில் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களையும் இது விடயத்தில் பெற்றுக் கொள்வது அவசியம்.

    இரண்டாவது புவிசார் அரசியல்காரர்களோடும், பூகோள அரசியல்காரர்களுடனும் இது தொடர்பான உரையாடலை நடாத்த வேண்டும். புதிய யாப்பு முயற்சிகளோ, தேர்தல்களோ நடைபெற முடியாத நிலையில் நடைமுறைக்கு சாத்தியமானது இடைக்கால நிர்வாகம் தான் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். புலம்பெயர் தரப்பின் முதலீடுகளையும் உள்வாங்கலாம் என்பதையும் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

    சர்வதேசத்துடனான ஊடாட்டம் தமிழ்த்தரப்பினரிடம் குறைவாகவே உள்ளது. குறைந்த பட்சம் மனோகணேசனின் தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் முயற்சிகளைக்கூட எடுப்பதற்கு தமிழ்த் தலைமைகள் தயாராக இல்லை.  உலக வங்கியின் நிவாரணத்திட்டம் மலையக மக்களுக்குக் கிடைக்காது என தெரியவந்த போது தமிழ் முற்போக்கு கூட்டணியினர் உலக வங்கிப்பிரதிநிதிகளை நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். அவ் உதவித்திட்டம் மலையக மக்களுக்கும் கிடைக்கும். மலைய மக்கள் சேர்க்கப்படவில்லை என்றால் உலக வங்கி உதவிகளை வழங்காது என உலக வங்கிப்பிரதிநிதிகள் உறுதி கூறியுள்ளனர்.

    இது போன்ற முயற்சிகளை சர்வதேச நாணய நிதிய உதவிகள் தொடர்பாகவும் தமிழ்த்தலைமைகள் மேற்கொண்டிருக்கலாம். இனப்பிரச்சினைத்தீர்வுடன் உதவிகளை இணைக்கும்படி கோரியிருக்கலாம். துரதிஸ்டவசமாக  எந்த முயற்சிகளும் இது விடயத்தில் நடக்கவி;ல்லை. இந்த விடயத்தில் மனோகணேசனுக்கு இருந்த சமூக அக்கறை கூட தமிழ்கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கோரியதையும் இங்கு கவனத்தில் எடுப்பது நல்லது.

    இடைக்கால நிர்வாகத்தில்; அங்கம் வகிப்பவர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கட்சி அரசியல் கலக்காமல் இருப்பது நல்லது. கல்வியாளர்கள், மதத் தலைவர்கள், சமூகப்பெரியவர்கள் அடங்கிய குழு ஒன்றைத்தெரிவு செய்து அதனிடம் அங்கத்தவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாம்.

    சுமந்திரன் இடைக்கால நிர்வாகத்தை எதிர்ப்பதற்கு கட்சி அரசியல் தவிர வேற எதுவும் இல்லை. ஆனால் குத்தவிளக்குக்காரர்களுக்கு இடைக்கால நிர்வாகம் வந்தால் 13 வது திருத்தம் இல்லாமல் போகும். அது இடம்பெறின் இந்தியாவின் பிடி தளர்ந்துவிடும் என்று கவலை இருக்கலாம.; 13 வது திருத்தத்தையே காப்பாற்ற முடியாத இந்தியாவிடம் பிடி இருப்பதும் , இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்.

    குத்துவிளக்குக்காரர்கள் இந்தியாவைப்பற்றி கவலைப்படுவதை விட தமிழ் மக்களைப்பற்றி கவலைப்படுவது நல்லது. மொத்தத்தில் தமிழ்த்தேசிய சக்திகளுக்கு பல பணிகள் காத்திருக்கின்றன.

    அரசியல் ஆய்வாளர் :- சி.அ.யோதிலிங்கம்!

    Leave A Comment