• Login / Register
 • கட்டுரைகள்

  நினைவேந்தல் அரசியலும்.. ஈழத்தமிழர்களது எதிர்காலமும்! – இரா.ம.அனுதரன்!

  வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை எமது காலத்தில் நேரடியாக தரிசித்த தலைமுறையினரிடம் ஏஞ்சியிருப்பது நினைவேந்தல் மட்டுமே என்பது, எம் ஒவ்வொருவரின் இயலாமையையும் எமக்கே இடித்துரைத்து நிற்கிறது என்றால் மிகையில்லை.

  நினைவேந்தல் என்பது தலைமுறைகள் கடந்து நினைவுகளை கடத்துவதனூடாக அடுத்து வரும் தலைமுறைகளுக்கு அந்த நினைவுகளின் பின்னணியில் நிகழ்ந்தேறிய வரலாற்றை புகட்டி தொடரும் வழிமுறையாகும்.

  இந்த நினைவேந்தல் மரபினை செம்மையாக கடைப்பிடித்தே ஒரு இனம் தனக்கான தேசத்தை உருவாக்கியதுடன் உலகில் இன்று வல்லமை பொருந்திய சக்தியாக தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆம், இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கதின் அடி அத்திபாரமே, ஒவ்வொரு யூத குடும்பத்திலும் செம்மையாக கடைப்பிடிக்கப்பட்ட நினைவேந்தல் ஊடாக கடத்தப்பட்ட விடுதலை வேட்கையாகும்.

  ஆனால், நினைவேந்தலை பண்டைய காலம் தொட்டு தனது வாழ்வியலாகவே கொண்டு வாழ்ந்துவரும் தமிழினம் அதற்கு வெகுதொலைவில் பயணிப்பது வேதனையானது மட்டுமல்லாது பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நினைவேந்தலானது அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகின்றமையே இவ் அவலத்திற்கு மூல காரணமாகும். தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே சர்வதேச போர் மரபுகளையெல்லாம் மீறி வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுத் தருவதில் அதிதீவிர முனைப்பு காட்ட வேண்டிய தமிழ் அரசியல் தரப்புகள் அதனை வசதியாக மறந்தோ, ஒப்புக்கு சில முயற்சிகளில் தலை காட்டிவிட்டு நினைவேந்துவதிலும், அறிக்கை விடுவதிலும் மும்முரமாக முனைப்பு காட்டி நிற்பது விந்தை.

  போர் முடிந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடைபெற்ற போரில் எத்தனையாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையோ, எத்தனையாயிரம் பேர் கை கால்களை இழந்தார்கள் என்பது பற்றியோ, எத்தனையாயிரம் பேர் கணவரை இழந்து பெண்தலைமைத்துவ குடும்பங்களாக வாழ்கிறார்கள், எத்தனையாயிரம் பேர் தாய்-தந்தையரை இழந்து அநாதரவாக வாழ்ந்து வருகின்றார்கள் என இன்னோரன்ன எந்த தகவலுக்கும் உருப்படியாக சொல்லக்கூடியதான எந்த புள்ளிவிபரங்களும் தமிழர் தரப்பின் கைகளில் இல்லை.

  இந்தளவில்தான் வருடா வருடம் செனீவாவுக்கு நீதி(?) கேட்டு பெரும் பயணம் போய் வருகினம் கொஞ்சப்பேர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்ணடம் போனானாம் என்பதாக இருக்கிறது இந்த பெரும் பயணம்.

  வடக்கு-கிழக்கில் பெரும்பாலான இடங்களில் தமிழர்களே, அரச அலுவலகங்களில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை பதவியை அலங்கரித்து வருவது. அது ஒருபக்கமிருக்க, கிழக்கில் இரண்டு ஆட்சிக் காலமும் வடக்கில் ஒரு ஆட்சிக் காலமும் மாகாண சபை ஆட்சி கூட தமிழர்களின் கைகளில் இருந்தது.

  என்னத்தை செய்தார்கள்...? எதனை சாதித்தார்கள்....? போருக்கு முன்னரும் பின்னரும் பாராளுமன்ற அங்கத்தவர்களாக வலம் வருபவர்களாகட்டும், அதனை முதலீடாக்கி உள்ளுர் மற்றும் தேசிய அரசியலில் காரியம் சாதிப்பவர்களாகட்டும் துளியளவு முனைப்பையாவது மேற்சொன்ன தரவுகளை சேகரிக்க எடுத்ததுண்டா?

  ஆட்களே இல்லாத பாராளுமன்ற அமர்வுகளில் வீர தீர பேச்சுக்களை நிகழ்த்தி அப்பதிவுகளை தம்சார் இணையங்களில் உலாவவிட்டு தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக முன்னிலைப்படுத்துவதிலும், கிடைக்கப்பெற்ற வசதி, வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடக் கூடாதென்பதற்காக காட்டும் முனைப்புகளிலும் துளியளவைத்தன்னும் மேற்சொன்ன தரவுகளைச் சேகரிக்க காட்டியதுண்டா?

  இவை எதையுமே செய்யாமல் வெறும் கையால் முழம் போடும் வித்தையை அரங்கேற்றி வருவது சொந்த இனத்திற்கே செய்யும் மாபெரும் துரோகமாகும்.

  இப்படிப்பட்ட கனவான்களிடம் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறைப்பட்டுக் கொண்டதாலும், தலையீடுகளாலும் அதன் மகத்துவம் மெல்ல மெல்ல குன்றி வருவதோடு நினைவேந்தல் நிகழ்வுகளில் இருந்து மக்கள் அந்நியப்படுத்தப்படும் அவலத்திற்கு வித்திட்டுள்ளது.

  போரின் பின்னரான காலத்தில் முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நினைவேந்தல்களிலும் ஏதோ ஒரு அநாகரிக செயல் கூடியிருந்தவர்களை மட்டுமல்ல மண்ணிலும், விண்ணிலும், காற்றிலும், கடலிலுமாக கரைந்துவிட்ட எம் உறவுகளையும் மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கியே வந்துள்ளது.

  அண்மைக்காலமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அரசியல் தலையீடுகள் இன்றி பொதுக் கட்டமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவது ஆறுதளிக்கும் விடயமாகும்.

  இப் பொதுக் கட்டமைப்பினரது ஏற்பாட்டில் கடந்த சில வருடங்காளக, எவ்வித பிசகும் இன்றி நேர்த்தியாக அதே நேரத்தில் அமைதியாக முள்ளிவாய்;கால் நினைவேந்தல் நடந்துள்ளது. பாராளுமன்ற வீரர்களும், மாகாண சபை சூரர்களும், ஏனைய பலவான்களும், புலம்பெயர் தேசத்தில் இருக்கும் சிலரால் கையாளப்படும் அசகாய சூரர்களும் வந்தார்கள், தம்பாட்டில் ஓரமாக நின்று வணக்கம் செலுத்தினார்கள், சென்றார்கள்.

  இதுவே கடந்த சில மே-18 நினைவு நாட்களில்;, கடந்த காலங்களில், தள்ளுமுள்ளும், இழுவறிப்பாடும், வசைபாடல்களும் அரங்கேறிய அதே முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறியது.

  இன்றும் தமிழர் மனம் ஆறுதல்கொள்ளும் வகையில் பொதுக்கட்டமைப்பினரது சீரிய ஒழுங்கமைப்பில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அதே முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆயிரக்கணக்கான மக்களது பங்கேற்புடன் உணர்வுபூர்மாக நடந்தேறியுள்ளது.

  அப்படியிருக்க தமிழ்த் தேசியத்தின் பெயரால் செயற்பட்டு வரும் கட்சி தலைவர் ஒருவரே முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட நினைவேந்தல்களை தமது கட்சி கைப்பற்ற வேண்டும் என பகிரங்கமாகவே தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிவிட்ட நிலையில் அந்த மக்களை பிரதிநித்துவம் செய்து அவர்களது குரலாக ஒலிப்பதற்கும், அவர்களது கோரிக்கைகளை வென்றெடுக்க பாடுபடுவதே பொருத்தமாகும்.

  அவ்வழியே செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்காது நினைவேந்தல்களில் முட்டிமோதுவதிலும், அடையாள போராட்டங்களை நடத்தி கூடிக்கலைவதிலும் மும்முரம் காட்டும் அடையாள அரசியலை அவர்கள் செய்து வருகின்றமையே தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்கு பிரதான காரணமாகும்.

  தமிழ்த் தேசியம் என்பது வெற்றுக் கோசமாகவே தமிழர்களிடையே இருப்பதற்கு காரணம் அதனை எம் வாழ்வு முறையாக வரித்துக் கொள்ளாமையே. ஆம், தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு தமிழனும் தனது வாழ்வு முறையாக மாற்றும் போதுதான் உண்மையான, உன்னதமான தமிழ்த் தேசிய அரசியல் பிறப்பெடுக்கும். அதுவரை அரசியல் ஒரு சாக்கடைதான் என மல்லாந்து படுத்திருந்து காறி உமிழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

  இந்த வரலாற்று திருப்பத்தை நோக்கியதான முதலாவது அடியாக நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் மயப்படுத்துவதற்கு உடனடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டே ஆகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

  வெறுமனே நினைவு நாடகளில் கூடுவதும், நிiனேவந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்துவதும், அறிக்கை தயாரித்து வாசிப்பதோடும் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாது மக்கள் மயப்படுத்துவதற்க உரிய வேலைத்திட்டங்களையும் செய்தாக வேண்டும்.

  யாரும் அழைப்பு விடுப்பார்கள், ஏற்பாடு செய்வார்கள் எனவும் பேருந்து ஒழுங்குகளுக்காகவும் காத்திருக்காது, வீடுகள் தோறும், வீதிகள் தோறும், கிராமங்கள் தோறும் என தமிழர் தேசமே ஒருமித்து எழுச்சிக் கோலம் பூண்ட வரலாறு ஒன்றும் கர்ணபரம்பரை கதைகள் கிடையாது. 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறியவைதான் இவைகள்.

  தற்போதைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பை, வடக்கு கிழக்கு இணைந்ததாக பரந்துபட்ட நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பானது மாகாணம், மாவட்டம், பிரதேசம், கிராமம் என பரந்துபட்ட செயற்பாட்டு வீச்சுள்ளவர்களை உள்வாங்கியதாக உருவாக்கப்படுவதே மேற்சொன்ன வகையில் நினைவேந்தல்களை மக்கள் மயப்படுத்துவதற்கான வழியாகும்.

  எந்த மக்களின் வாக்குப்பலத்தில், எந்த போராட்ட பின்னணியில் 22 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்களோ, அவர்கள் சாட்சியாகவே அந்த மக்களும், அந்த போராட்டமும் முள்ளிவாய்க்காலில் நிலைகுத்தி நிர்மூலமாகிப் போனதென்ற கசப்பான பேருண்மையை நம்மில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்ளப் போகின்றோம்?

  இந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாதவரை, ஏற்றுக் கொள்ளாதவரை, தமிழர்களை கடவுள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது, இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளிடமிருந்தும், தரப்புகளிடமிருந்தும்.

  ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் உதிப்பதையோ மறைவதையோ தடுக்க முடியாது என்பது போல, முள்ளிவாய்க்காலில் மூச்சடக்கப்பட்ட எம் உறவுகளின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்பது திண்ணம்.

  TNMedia24 இணையத்திற்காக - இரா.ம.அனுதரன்

  18.05.2023

  Leave A Comment