• Login / Register
  • கட்டுரைகள்

    செறிவூட்டப்பட்ட அரிசி பலன் தருமா? - அறிவியல் சார்ந்த கேள்விகளும் பதில்களும்

    நாடெங்குமுள்ள நியாய விலைக்கடைகள், அங்கன்வாடி (ஐ.சி.டி.எஸ்) குழந்தைகள் மையங்கள், பள்ளி சத்துணவு மற்றும் அரசின் நலத்திட்டங்களில் ஏப்ரல் 1 முதல் செயற்கையாகச் சத்துக்கள் சேர்க்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இவ்வாறு செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பில் நிறைய சந்தேகங்கள் இருக்கும் அதன்மீதான் கேள்விகளுக்கான பதிலை இங்கு பார்க்கலாம். 

    1. இரும்பு, ஜிங்க், வைட்டமின் உள்ளிட்ட நுண் சத்துக்கள் குறைபாட்டினால் குழந்தைகள் மரணம் ஏற்படுகிறதா?

    ஆம்! 2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தைகளின் மரணத்தில் எட்டில் ஒரு பங்கு- 12% தாதுப் பொருட்கள் மற்றும் வைட்டமின் சத்துக் குறைவினால் ஏற்பட்டவை. அவை முக்கியமாக இரும்புச்சத்து, துத்தநாகம், போலிக் அமிலம், வைட்டமின் பி12, அயோடின், வைட்டமின் ஏ ஆகியவை. இதில் வைட்டமின் ஏ திரவம் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை, வருடத்திற்கு இருமுறை திரவமாகத்தரப்படுகிறது. பொது மக்களுக்கு அயோடின் கலந்த உப்பு வழங்குவது புழக்கத்தில் உள்ளது. இரும்புச்சத்து போலிக் அமிலம் அனீமியா முக்த்பாரத் திட்டத்தின் வழியாக குழந்தைகள், கருவுற்ற மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்குக் கிடைக்கிறது.

    தேசிய குடும்ப நலக் கணக்கொடுப்பின்படி(என்.எஃப்.எச்.எஸ் 2019-21ன் படி) 57 சதவீதம் 18 முதல் 49 வயதிற்கு உட்பட்ட பெண்களும், 67 சதவீதம் குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடலின் இரும்புச்சத்தில் 60 சதவீத அளவு ரத்த சிகப்பு அணுக்கள் மற்றும் தசையின் மையோகுளோபினில் உள்ளது. உடல் வளர்ச்சி, திசுக்களின் பிரிதல், முதிர்தல், உடல் உழைப்பு, கற்றல், புரிந்துகொள்ளுதல் எனப் பலவற்றிற்கும் இரும்புச்சத்து தேவை. மேலும், திசுக்களில் நடைபெறும் நொதிவினைகள், டிஎன்ஏ முதிர்தல் ஆகியவற்றின் தேவையாகவும் மைட்டோகாண்ட்ரியாவின் சக்தியாகவும் விளங்குகிறது. மறுபக்கம் புரதம் கொழுப்பு மற்றும் நியூக்ளிக் அமிலத்தினை பாதிக்கும் எதிர்வினை புரியும் தனி ஆக்சிஜனையும் (free radicals) உற்பத்தி செய்கிறது.

    இரும்புச் சத்தினை  உறிதல், உடலில் சேர்தல், ரத்தத்தில் கலந்து வேலை செய்தல் மற்றும் வெளியேற்றல் மற்ற தாது உப்புக்களிலிருந்து வேறுபட்டது. சிறுகுடலின் டியோடினம் பகுதியில் உறிஞ்சப்படுகிறது. ஆனால் அதிகளவில் இரும்புச் சத்து உடலில் சேர்ந்து விட்டால் வெளியேற்றுவதற்கு உடலியங்கு முறையில் வழி கிடையாது. தினசரி தேவையில் 90 சதவீதம் இரும்புச் சத்து வாழ்நாள் முடிந்த சிகப்பணுக்களில் இருந்து கிடைக்கிறது. மீதி 10 சதவீதம் மட்டுமே தாவர உணவுகள் மூலம்  ஹீமில்லாத இரும்புச் சத்தாகவும், மாமிச உணவுகள் மூலம் ஹீம் கலந்த  அணுவாகவும் கிடைக்கிறது. சைவ உணவுகள் 10 சதவீதம், சைவ, அசைவ கலப்பு உணவுகள் 15 சதவீதம் இரும்புச் சத்தைத் தரும்.

    உணவிலிருந்து கிடைக்கும்  இரும்புச்சத்து ஒன்றிலிருந்து 40 சதவீதம் வரை உள்ளது. தாவர உணவே பெரும்பாலும் நம் மக்களின் உணவாக இருப்பதால் இந்தியர்களுக்கான இரும்புச்சத்தின் தினசரி தேவை(ஆர்டிஏ) வழக்கத்தை விட இரண்டு - மூன்று மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தாவர உணவிலுள்ள ஃபைட்டேட், ஆக்சலேட், நார்ச்சத்து உள்ளிட்டவை இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். உணவிலுள்ள இரும்புச் சத்தின் அளவு, அதிலிருந்து உறிஞ்சக் கிடைக்கும் அளவு மற்றும் உடலின் தேவையைப் பொறுத்துத் தான் உறிஞ்சப்படும். காபி, டீ போன்ற  பானங்கள் இரும்புச்சத்தினை உறிஞ்சுவதைக் குறைக்கும். வைட்டமின் சி நிறைந்த பழங்கள்  இரும்புச் சத்து உறிஞ்சுவதை அதிகரிக்கும். சமைப்பது, உணவில் கலந்துள்ள எதிர்ச்சத்துக்கள்(Antinutrients) சரிவிகிதம் இல்லாத தாவர உணவு, உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவை இரும்புச் சத்துக் குறைவாகக் கிடைப்பதற்கான மற்ற காரணங்கள் ஆகும். 

    பட்டை தீட்டப்படாத தானியங்களின் பயன்பாடு கிராமப்புறங்களில் 23 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 10 சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதனால் ஏற்படும் நுண்சத்து இழப்பு கிராமப்புறங்களில் 21 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 11 சதவீதமாகவும் உள்ளது.1983 இல் இருந்து 2011 வரை ஏற்பட்ட இந்த மாற்றங்களை இம்பேக்ட் ஆப் ஹிஸ்டாரிக்கல் சேஞ்சஸ் இன் கோர்ஸ் சீரியல் கன்சம்ப்ஷன்  இந்தியா இன் மைக்ரோ நியூட்ரியன்ட்  இன்டேக் அண்ட் அனிமீயா பிரீவேலன்ஸ் என்று ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டுள்ளது. சத்துள்ள உணவினைத் தெரிந்து வாங்கி உண்ணல், நகர்ப்புற வாசிகளின் வருமானம், வீட்டில் நிலவும் சூழ்நிலை அவர்களுக்கு உடனடியாக கிடைக்கும் நலச் சேவைகள், கல்வி அறிவு ஆகியவைகளை இந்த வேறுபாட்டிற்கான காரணிகளாக 2020-21இல் வெளியான ஸ்டண்டிங் இன் வியட்நாம் என்னும் ஆய்வுக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. 

    வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (அதிக நுண் பதப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை உண்பது உள்ளிட்டவை) அதிக பால்(அமிர்தமானாலும் அளவிற்கு மீறினால் நஞ்சு)மற்றும் தாய்மார்கள் பொது மக்களின் சத்துணவு மற்றும் உடல் வளர்ச்சி பற்றிய அறியாமை  ரத்த சோகைக்கான மற்ற காரணங்கள் ஆகும்.



    2. இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் ரத்த சோகை என்றால் என்ன?

    ரத்த சோகை உடலில் சிகப்பணுவில் உள்ள ஹீமோகுளோபின் அளவைக் குறிக்கிறது. ஐந்து வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு 10 கிராம்டெசிலி மற்றவர்களுக்கு 11 கிராம்டெசிலி இரத்த சோகை என்ற கணக்கெடுத்துக் கொள்ளப்படுகிறது. மலேரியா, கொக்கிப்புழு, தன் சுத்தம் சுகாதாரமின்மை, நோய்த்தொற்று, குடல் அழற்சி 45 சதவீதம் வெப்ப சக்தியினை தரும் தீட்டப்பட்ட தானியங்களில் உள்ள குறைந்த இரும்புச் சத்து, அதிக எதிர்ச்சத்துக்கள், குறைவான மாமிச உணவு, அதிகமான பைட்டேட் மோலார் விகிதம் (ஒன்றுக்கு மேல் விகிதம் இருப்பின் உறிஞ்சப்படும் அளவு குறைவு) உதாரணமாக மில் அரிசியில் பைட்டேட் குறைவு ஆனால் பைட்டேட் மோலார் விகிதம் அதிகம். எனவே அதன் இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியிலிருந்துகூடக் குறைவாகத்தான் உறிஞ்சப்படும். 

    ஊற வைப்பது, நொதிக்க அல்லது புளிக்க வைப்பது, முளைக் கட்டுவது ஆகியவைகளைச்செய்யும்போது ஏற்படும் வெப்பம் மற்றும் நொதி வினை மூலம் பைட்டிக்அமிலம் குறையும். எளிமையான தீட்டல், பதப்படுத்துதல் முறைகளில் வைட்டமின் தாது உப்புக்கள் இழப்பு குறையும். முளைக் கட்டுதல், வேகவைத்தல் மூலம் பயறுகளில் உள்ள பைட்டோகெமிக்கல் குறைந்து உடலில் சேரும் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும்.

    இரும்புச் சத்து பற்றாக்குறையால் ஏற்படும் ரத்த சோகை என்பது உலகளவில் 23% ஆகவும் இரத்த சோகையில் உள்ள இந்தியரில் 50 சதவீதத்தினருக்கு மட்டுமே உள்ளது. மற்றவர்களுக்கு வேறு காரணங்களால் இந்த ரத்த சோகை நோயுள்ளது. உலக அளவில் குழந்தைகளில் பத்திலிருந்து பதினைந்து சதவீதமும், இளம்பெண்களில் 25-லிருந்து 38 சதவீதமும் மட்டுமே இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கிறது என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இரும்புச் சத்து மாத்திரை, மருந்துகள் இந்திய மக்களுக்குக் கிடைத்திருப்பினும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ரத்தச்சோகை நோய்க்கு இது முக்கியமான காரணம். மீதமுள்ள 50 சதவீதம் ரத்தசோகைக்கு நம்மக்களின் நோய்த் தொற்றுகள், உடலில் உள்ள வெளிப்படா அழற்சி  நோய் (subclinical infalmmation), மலேரியா மற்றும் குடல் புழுக்கள் காரணமாகவும் இருக்கலாம். ரத்த சோகை வராமல் தடுக்க புரதச்சத்து போலிக் அமிலம் வைட்டமின் பி12, ரைபோபிளோவின், காப்பர் மற்றும் வைட்டமின் ஏ உள்பட பல சத்துக்கள்  தேவைப்படுகிறன. உடல்பருமன், இன்சுலின் மந்த நிலைமை, அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகள் இன்மை ஆகியவை  ரத்தசோகைச் சங்கிலியின் மற்ற காரணிகள்.

    3. ரத்த சோகையை சரி செய்ய என்ன வழிமுறைகள், திட்டங்கள் நடப்பில் உள்ளன?

    இரும்பு சத்து குறைபாட்டினை தவிர்க்கும் மருந்து மாத்திரைகள் பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கப்படுகின்றது. இளங்குழந்தைகள் மற்றும் பள்ளிக்குழந்தைகள், விடலைப்பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 15-49 வயதுள்ள பெண்கள் இதன் மூலம் பயனடைகின்றனர். விடலைகள், பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இரும்பு சத்து குறைபாட்டினை தவிர்க்கும் மருந்து மாத்திரைகள்  தரப்படுகிறது. ஆண்டுக்கு இரு முறை குடற்புழு நீக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஒரு  வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு நீக்கும் மருந்து தரப்படுகிறது. இதனால்1-19 வயதுள்ள குழந்தைகள் பயனடைகின்றனர். மலேரியா நோய் கண்டுபிடித்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு சிகிச்சை அளிக்கப்படுவதும், மக்கள் நல ஊழியர்களுக்கு சத்துணவு பற்றிய பயிற்சி, நலக் கல்வி தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆனாலும் ரத்தசோகையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்து 50 வருடங்களாக அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.

    உகாண்டாவில் நடைபெற்ற ஆய்வுகள் உணவின் பன்முகத் தன்மையை அதிகரிக்கும் போது ரத்த சோகைக்கான மருத்துவம் பலன் அளித்துள்ளதாக தெரிவிக்கிறது. பாரம்பரிய உணவுகளான தீட்டப்படாத சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது மற்றும் வழக்கமான உணவுகளான அரிசி, கோதுமையைப் பட்டை தீட்டாமல் உண்பது, மாமிச உணவின் அளவை அதிகரிப்பது, சமையல் முறைகளில் சத்து வீணாவதை குறைப்பது உடல் நலம் பேணுவது, இரும்புச்சத்துள்ள உணவினை தருவது (எ-கா கருவேப்பிலை(8.7மி கி) புதினா(8.6மி.கி) கொத்துமல்லி(5.5மிகி) முருங்கை இலை(4.6மிகி)/100கிராம் ) ஆகிவைகள் மூலம் இரும்புச்சத்து கிடைப்பதை அதிகரித்து  உடலின் தொடர் வளர்ச்சியினை உறுதி செய்யலாம்.



    4. உணவுப் பொருள்களைச் செறிவூட்டுவதன் மூலம் ரத்த சோகையைக் குறைக்க முடியுமா? அரிசி, கோதுமை மற்றும் சோள மாவு செறிவூட்டப்பட்டால் ரத்த சோகை சரியாகுமா?

    80 நாடுகளில் கோதுமை மற்றும் சோள மாவுகள் செறிவூட்டப்படுகின்றன. மூன்று பில்லியன் மக்கள் அரிசியை தினசரி உணவாகப் பயன்படுத்துகிறார்கள். 520 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி ஆண்டுதோறும் உண்ணப்படுகிறது.2019இல் 10,483 பேர் பங்கேற்ற 17 ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய்ந்து முடிவினை காக்கரேன் குழுமம் வெளியிட்டது. இந்தியாவில் நடைபெற்ற நான்கு ஆராய்ச்சிகளும், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பிரேசில் மற்றும் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளும்  கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

    10 ஆராய்ச்சிகளில் பள்ளி முன் பருவக் குழந்தைகளும், கர்ப்பம் தரிக்காத தாய்ப்பால் ஊட்டாத பெண்களும் பங்கேற்றனர். 6 ஆராய்ச்சிகளில்  இரும்புச் சத்து தனித்தும், 11 ஆராய்ச்சிகளில் துத்தநாகம், போலிக் அமிலம், வைட்டமின் ஏ-வும் கலந்து சேர்க்கப்பட்டிருந்தன. இவைகளிலிருந்து கிடைத்த இரும்புச் சத்தின் அளவு 0.2 மில்லிகிராமிலிருந்து 112.8 மில்லிகிராம் வரை இருந்தது, உட்கொண்ட காலம் இரண்டு வாரத்தில் ஆரம்பித்து 48 மாதம் வரை இருந்தது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் இந்த ஆராய்ச்சிகளில் பங்கெடுத்துள்ளனர். இவ்வாராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? “Make little or no difference in the risk of having anaemia or reducing iron deficiency anaemia except rise in HB. Low certain evidence (Low certain evidence=Our confidence in the effect is limited.The true effect maybe substantially different from the estimate of the effect)”.

    செறிவூட்டப்படுவதால் மிகச்சிறிய அல்லது எந்த ஒரு வித்தியாசமும் ரத்த சோகை நோய் வருவதில் மாற்றம் ஏற்படுவது இல்லை. ஹீமோகுளோபின் மட்டும் அதிகமாகலாம். செறிவூட்டப்படுவதால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புகள் பற்றி எந்தத் தரவும் ஆய்வுக் கட்டுரைகளில் இல்லை. பொதுமக்களின் வார்த்தையில் சொல்லப்போனால் ரத்த சோகை குறைந்தாலும் குறையலாம்; குறையாமல் போனாலும் போகலாம். செறிவூட்டப்பட்ட அரிசியுடன் சாதாரண அரிசியை ஒப்பிட்டு இதுவரை  எந்த ஆய்வும் செய்யப்படவில்லை.



    5. செறிவூட்டப்பட்ட அரிசியினால் உடல் நலக் கோளாறுகள் உருவாகுமா?

    உடல் நலக் கோளாறுகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இதுவரை வெளியான மற்ற ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சாதாரணமாக உணவுக்கு அரை மணி நேரம் முன்னரோ அல்லது சாப்பிட்டு  இரண்டு மணி நேரம் கழித்தோதான்  இரும்புச் சத்து மருந்தை தரச் சொல்லுவார் மருத்துவர். வெறும் வயிறாக இருக்கும்போது உண்டால் மருந்தில் உள்ள இரும்புச் சத்து அதிகளவில் ரத்தத்தில் சேரும். உணவோடு சேர்ந்து உறிஞ்சப்படும்போது ரத்தத்தில் சேரும் இரும்புச் சத்தின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். ரத்த சோகையைச் சரி செய்ய தரப்படும் இரும்புச்சத்து மருந்துகளில்  80 சதவீதம் மருந்து உறிஞ்சப்படாமல் பெருங்குடலை அடைகிறது. மீதமாகி பெருங்குடலினை அடையும் இரும்புச் சத்து குடலில் உள்ள  நல்ல நுண்ணுயிர்களை (லேக்டோபேசிலஸ் பி பிடோ பாக்டீரியம்) குறைத்து தீமை விளைவிக்கும் ஈ கோலை, சால்மொனல்லா, கிளப்சியெல்லா பாக்டீரியாக்களின் வளர்ச்சியினை தூண்டுகிறது. அவைகளின் வீரியத்தை அதிகரிக்கிறது. ஆப்பிரிக்காவின் கென்யாவில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன இதை உறுதிப்படுத்துகின்றன. இதனால்  குழந்தைகளுக்கு நோய்த் தொற்று அதிகரிப்பதும் மருத்துவமனையில் சேருவதும் அதிகரிப்பதை ஆதாரப்பூர்வமாகத் தெரிவிக்கின்றன. இரும்புச்சத்துப் பற்றாக்குறை இல்லாத 50 சதவீதத்தினருக்கு இவ்வகையான பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.

    செறிவூட்டப்பட்டுள்ள உணவுகளின் மூலம் உடலின் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தின் நோய்க்கிருமிக்கான எதிர்வினை மாறலாம். குடலில் கசிவு உட்பட பாதிப்பு ஏற்படலாம். அழற்சியினை ஏற்படுத்தும் ஐ எல்6,ஐ எல் 7 டிஎன்எப் ஆல்பா அதிகமாகும். இதன் காரணமாக கொழுப்பு படிதல், நீரிழிவு மிகு  ரத்த அழுத்தம் மற்றும் குறைவான இரும்புச்சத்து உறிஞ்சப்படுதல் நிகழலாம். லாக்டோபரின் லைபோகலின் ஆகிய சத்துக்கள் உணவில் உள்ள இரும்புச் சத்து கெட்ட கிருமிகளுக்குக் கிடைக்காமல் தடுக்கும். அபரிமிதமாகக் கிடைக்கும் இரும்புச் சத்து  கெட்ட கிருமிகளைத் தூண்டிவிட்டு உடல் நோயை உண்டாக்கும்.

    தலசீமியா, சிக்கில் செல் சிவப்பணு சிதைவு நோய் மற்றும் ஹீமோகுரோமெட்டோசிஸ்  உள்ளவர்களுக்கு ஏற்கனவே இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கும். தானே வெளியேற வழியில்லாத இரும்புச்சத்து உடல் உறுப்புகளில் படியும். எங்கு படிகிறது என்பதைப் பொறுத்து பாதிப்பு மிகக் குறைவாக இருக்கலாம் அல்லது அதிகமாகலாம். குடல் அழற்சியின் காரணமாக வயிற்றுப்போக்கு குழந்தைக்கு வரலாம். குடல் அழற்சி நோய் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகமாகும். சிலருக்கு கொக்கிப் புழுவினுடைய பாதிப்பு அதிகமாகலாம். இந்த செய்திகளை  மற்ற ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

    பசுமைப் புரட்சியின் காரணமாக அரிசியும் கோதுமையும் முன்னுரிமை பெற்றன சத்து நிறைந்த சிறு (அருந்)தானியங்களான கம்பு, ராகி, சோளம் மதிப்பிழந்தன சிறு (அருந்)தானியங்களை உணவில் சேர்க்க சொல்லி நேஷனல் ஃபுட் செக்யூரிட்டி ஆக்ட் 2013-ல் சொல்லியும், இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அருந்தானியங்கள் அதிகம் கார்பன்-டை-ஆக்சைடு நிலவும் சூழலில் கூட நல்ல மகசூலை தருவன அவைகளில் உள்ள ஒதுக்கி தள்ளப்பட்ட பைடேட்டுகள் கூட சர்க்கரை, கொலஸ்ட்ராலை குறைப்பதாலும் ஆன்ட்டி கேன்சர் ஆன்டி ஆக்சிடெட்ன் பாதுகாப்பினைத் தருவதால்  நல்லவை எனத் தற்போது மதிக்கப்படுகிறது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களின் தினசரி கலோரியில் பாதியினை அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட தானியங்கள் தருகின்றன. அதிகச் செலவு செய்து, உடலையும் கெடுத்து, நோயையும் அளித்து, சக்தியையும் தராத செறிவூட்டப்பட்ட அரிசி பலன் அளிக்காது என்பதுதான் இதுவரை வெளிவந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் அனைவரின் கருத்து.

    (கட்டுரையாளர்: குழந்தைகள் நல மருத்துவர், ஈரோடு)


    Leave A Comment