பெண்கள் தினம் உருவானது எப்படி?
மார்ச் 08, இன்று சர்வதேச பெண்கள்தினம், பெண்களுக்கான உரிமைக்கான அவசியத்தை சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நாள் .
இன்றும் உலகின் எதோ ஒரு மூலையில் ஒரு பெண் அடக்குமுறைக்கு உள்ளாகிக்கொண்டுதான் இருக்கிறார் என்பது இந்த நவீன உலகத்தில் மறுக்க முடியாத உண்மை.
பெண்கள் தினம் எவ்வாறு உருவானது? எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற குரல் எங்கு முதலில் ஒலித்தது என்பது தொடர்பாக தெரிந்து கொள்ளலாம்.
உலக மகளிர் நாள் முதல் முதலில் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. எனினும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து முதன்முதலில் தோன்றியது:
1848 ஆம் ஆண்டு, பெண்கள் அடிமைப்படுத்தப்படுத்துவதற்கு எதிராக, அமெரிக்கர்களான எலிசபெத் கேடி ஸ்டாண்டன், லுக்ரேஷியா மோட் ஆகிய பெண்கள் நியூயார்க்கில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர். இது முதல் பெண் உரிமை மாநாடு என்று கருதப்படுகிறது. பெண்களின் உரிமைகளுக்கான முதல் இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் ஐ.நா., மகளிர் நாளை அங்கீகரிக்கவும் இந்த முதல் இயக்கமே அடித்தளமிட்டது.
முதல்முதலில் 1908 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவால் இந்நாள் கொண்டாடப்பட்டது.

1857 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற பின்னலாடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை அளிக்கும் விதமாக அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி இந்த நாளை தேர்வு செய்தது. அந்த போராட்டத்தில் பெண்கள் தங்களின் வேலை நேரம் குறைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினர்.
அதுபோல 1917 ஆம் ஆண்டு (பிப்ரவரி 23 ஆம் தேதி) ரஷியாவில் 'உணவும் அமைதியும்' என்ற பெயரில் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமே சோவியத் ரஷியாவில் பெண்களுக்கு வாக்குரிமை பெற வழிவகுத்தது. கிரிகோரியன் காலண்டர்படி, அந்த நாள் மார்ச் 8. இதன்பின்னர் 1977ல், மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் நாளாக ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்தது. இவ்வாறே இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் மகளிர்தினம் உருவானது.
இந்த வருடத்திற்கான ஐ.நா. கருப்பொருள் 'டிஜிட்ஆல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்'. மாறி வரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வியின் முன்னேற்றத்திற்காக போராடும் பெண்கள், சிறுமிகளை அங்கீகரித்துக் கொண்டாடப்படுகிறது.
பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் எண்ம(டிஜிட்டல்) பாலின இடைவெளியின் தாக்கத்தை ஆராயவும், எண்ம இடைவெளிகளில் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இந்நாள் வலியுறுத்துகிறது.
ஏனெனில், உலக அளவில் 37% பெண்கள் இன்னும் இணையத்தைப் பயன்படுத்தவில்லை. பெண்கள் இணையத்தை அணுக முடியாமலோ, ஆன்லைனில் பாதுகாப்பாக உணர முடியாமலோ தேவையான எண்ம (டிஜிட்டல்) திறன்களை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடியாது. இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) தொடர்பான தொழில்ககளில் அவர்கள் ஈடுபடும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஏனெனில், 2050 ஆம் ஆண்டுக்குள் 75% வேலைகள் இந்த நான்கு துறைகளை சார்ந்தே இருக்கும். இன்றும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பதவிகளில் பெண்கள் வெறும் 22% மட்டுமே உள்ளனர். பெண்களை தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வருவதே இந்த ஆண்டு மகளிர் நாளின் நோக்கம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
Leave A Comment