• Login / Register
 • கட்டுரைகள்

  விஜய்-சீமான் கூட்டணி; நாதவுக்கு பலமா? பலவீனமா?

  சீமானின் அரசியல் வாழ்க்கையிலேயே தீர்க்கமான, கடினமான முடிவுகளை எடுக்கவேண்டிய காலகட்டம் இனிமேல்தான் வரப்போகிறது.

  இந்த முடிவுகள்தான் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி போக்கை நிர்ணயிப்பவையாக இருக்கும். 

  ஏனெனில் நாம் தமிழர் கட்சி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுமா அல்லது என்றுமே இல்லையா என்பதை நிர்ணயிக்கும் காலகட்டத்திற்கு நாதக வந்து சேர்ந்துவிட்டது.

  எதை குறிப்பிடுகிறேன்?

  2026 தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதிதாக உருவாக இருக்கும் நடிகர் விஜய்யின் கட்சியோடு கூட்டணி வைக்குமா வைக்காதா? என்பதுதான் அது.

  விஜய்யின் புதிய கட்சியோடு நாதக கூட்டணி வைக்கலாம் என்பது போன்ற சமிக்சைகளை நாதகவினர் வெளியிடுகின்றனர்.

  கூட்டணி வைக்கலாமா அல்லது கூடாதா?

  இந்த வாய்ப்பு உண்மையில் மயக்கத்தை (tempting) ஏற்படுத்தக்கூடியதுதான்.

  இதில் சீமான் என்ற தலைமை, ஆசையை தூண்டுகிற இந்த வாய்ப்பின் சாதக பாதக நிலையை நன்றாக ஆராய்ந்து விட்டுத்தான் முடிவை எடுக்கும். 

  ஆனால் இது விடயத்தில் ஒரு பார்வையாளனாக என்னுடைய அனுமானத்தை முன்வைக்க விரும்புகிறேன். 

  இதில் பல பக்கங்கள் இருக்கின்றன.

  அதில் ஒரேயொரு பக்கத்தை மட்டும் எடுத்து கொள்கிறேன்.

  தலைவர்களின் ஆளுமை, அது தொடர்பான narrative என்ற பக்கம்.

  ஜனநாயக தேர்தல்களில் தலைவர்களின் ஆளுமைகள், அந்த ஆளுமைகளை மக்கள் எவ்வாறு உள்வாங்குகிறார்கள், புரிந்துகொள்கிறார்கள் என்பது மிக முக்கியமானது.

  உலகெங்கும் நடக்கும் ஜனநாயக தேர்தல்களில் மக்கள் தனி நபர் ஆளுமைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை கூர்ந்து கவனித்தால் தெரியும்.

  ஏனெனில் நாம் எல்லோரும் மனிதர்கள். மனிதர்கள் தனக்கான தலைவனாக alpha ஐ மட்டுமே தேர்ந்தெடுக்கும்.

  ஒரு பெண் தனக்கான mate ஐ தேர்ந்தெடுக்கும்போது alpha male இற்குத்தான் முன்னுரிமை கொடுக்கும்.

  மனிதர்களும் தங்களை வழிநடத்த வருபவனிடம் alpha characteristics இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.

  அதன்படி திமுகவிற்கு எதிர் தரப்பில் 2026 தேர்தலில் நிற்கப்போவது ஈபிஸ், அண்ணாமலை, சீமான், விஜய்.

  இதில் சாமானியர் பார்வையில் தனி நபர் ஆளுமையில் சீமானிற்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். ஏனெனில் எந்தவித பின்புலமும் இல்லாமல் பூஜ்ஜியத்திலிருந்து எழுந்து வந்தவர். 

  2026 இலும் நாம் தமிழர் தனித்து நிற்குமாயின் இதுவரை காலமும் அது உருவாக்கி வைத்திருந்த narrative இனை வலுப்படுத்தும்.

  என்ன narrative அது?

  2016, 2019, 2021, 2024 என சகல தேர்தலிலும் கருத்தியல் அடிப்படையிலும் இலட்சிய நோக்கத்தின் அடிப்படையிலும் தனித்து நின்று களம் கண்ட கட்சி என்ற narrative.

  இந்த narrative நிச்சயம் சாமானியரிடத்திலும் இளைய தலைமுறையிடமும் கணிசமான வாக்குகளை பெற்றுத்தரும்.

  ஆனால் விஜய்யோடு கூட்டணி சேர்வது இந்த narrative இனை பலவீனப்படுத்தும்.

  இன்னொரு முக்கியமான விடயம் நாம் தமிழர், விஜய் கூட்டணி ஏற்பட்டுவிட்டது என வைத்துக்கொள்வோம்.

  விஜய்யால் நாம் தமிழர் அடையும் லாபத்தைவிட, நாம் தமிழரால் விஜய் அடையக்கூடிய லாபம் அதிகம்.

  எப்படி?

  இந்த உச்ச நடிகர்கள் சகலருக்குமே மிக முக்கியமான பலவீனம் உண்டு.

  இவர்களால் அரசியலில் மராத்தன் ஓட்டம் ஓட முடியாது.

  தேர்தல் அரசியலில் ஏற்படும் சுணக்கங்கள், தோல்விகளை தாங்கிக்கொண்டு, மக்களோடு மக்களாக போராட்ட களத்தில் நின்று தாங்குபிடிக்கும் திறன் இவர்களிடத்தில் இருக்காது.

  காரணம் இவர்களது கடந்த கால வாழ்வியல் பின்னணி. 

  பல கோடி ரூபாய்களை சம்பளமாக பெற்று அரசர்கள் போல பிறரால் கவனிக்கப்பட்டு வந்தவர்கள் இவர்கள். இவர்களால் சாமானிய மக்களோடு களத்தில் அதிக நேரம் நிற்கமுடியாது. அதற்கான உளவியல் தயார்நிலை அவர்களுக்கு வராது. தேர்தல் அரசியலில் வெற்றி பெற மராத்தன் ஓட்டம் ஓடக்கூடிய மனவலிமை அவசியம்.

  இந்த பலவீனத்தை வைத்திருப்பதால்தான், உச்ச நடிகர்கள் அரசியலில் குதிக்கும்போது Quick Victory ஐ எதிர்பார்க்கிறார்கள்.

  இதற்கு உதாரணங்கள் உண்டு.

  உச்ச நடிகர் ரஜினிக்கு அரசியலுக்கு வரும் ஆசை எத்தனையோ வருடங்கள் இருந்தது. காத்திருந்தார். காலம் கனிந்தது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்தனர். காலடி வைக்க நினைத்தார்.

  ஆனால் அவர் எதிர்பார்த்தது Quick Victory. 

  முதல் தடவை 15-20% எடுத்து சில ஆசனங்களை கைப்பற்றி, அடுத்த 5 வருடங்கள் ஆளும் கட்சியை கேள்வி கேட்டு, மக்களின் பிரச்சினைகளை போராட்டங்களாக மாற்றி, திரும்ப தேர்தலில் நின்று அதிகாரத்தை கைப்பற்றும் “மன வலிமை” அவரிடத்தில் இல்லை. அவருக்கு மராத்தன் ஓட்டம் ஓடக்கூடிய மனவலிமை இல்லை.

  வந்தால் முதல் தடவையே ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என எதிர்பார்த்தார். கள தகவல்கள் அது நிகழாது என கூறியது. 

  உடனே உடல் நிலையை காரணம் காட்டி விலகினார்.

  அடுத்தது கமல். அவருக்கும் Quick Victory கிடைக்கவில்லை. அவரிடமும் மராத்தன் ஓட்டம் ஓடக்கூடிய மனவலிமை இல்லை. இன்று அரசியலில் அவர் ஒரு நகைச்சுவை.

  இதில் விதிவிலக்கு நடிகர் விஜயகாந்த். அவருக்கு அந்த மனவலிமை இருந்தது.

  ரஜினிகாந்திற்கு இருக்கும் அதே “மன வலிமை” சிக்கல் விஐய்க்கும் இருக்கும் என்றே அனுமானிக்கிறேன். 

  2026 தேர்தலில் விஜய் தனியாக நின்றால் ரஜினிக்கு எது நேர்ந்திருக்குமோ அதுதான் விஜய்க்கும் கிடைக்கும்.

  அதே 15-20%. சில ஆசனங்கள். அடுத்த 5 வருடங்களும் ஆளும் கட்சியை கேள்விகளால் துளைத்து களத்தில் நிற்கவேண்டும். மக்களின் எல்லா போராட்டத்திலும் கருத்து கேட்பார்கள். 

  அதிலும் திமுக சார்பு ஊடகங்கள் character assassination செய்ய, அவரை உளற வைக்க குதர்க்கமான கேள்விகளை கேட்பார்கள்.

  நேற்றுவரை கையெடுத்து கும்பிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் விஜய் “பாலஸ்தீன பிரச்சினையில் ஏன் கருத்து சொல்லவில்லை? உக்ரைன் விசயத்தில் ஏன் கருத்து சொல்லவில்லை’ என கேள்விகள் கேட்கும். இதையெல்லாம் விஜய் சமாளிக்கவேண்டும்.

  ஆக அடுத்து வரும் சில வருடங்கள், அரசியல் அதற்கே உரித்தான கடினமான பரீட்சையை விஜய்க்கு வைக்கும்.

  இதில் நடிகர் விஜய்க்கு அரசியல் மராத்தன் ஓட்டம் ஓடக்கூடிய மனவலிமை இருக்கிறதா என்பது முக்கியமானது.

  எனது அனுமானப்படி அவருக்கு இருக்காது.

  அப்படியெனில் விஜய் அரசியலுக்கு வந்து தோற்று மராத்தன் மனவலிமை இல்லாமல் விலகி போகட்டும். காலம் அவரது பலவீனத்தை expose செய்யட்டும்.

  எனது இந்த அனுமானத்தை தாண்டி அவருக்கு அந்த மராத்தன் மனவலிமை இருந்தால், அதை விதிவிலக்காக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். நாம் தமிழரும் அதற்கேற்ப உத்தியை மாற்றிக்கொள்ளலாம்.

  ஆனால் நாம் தமிழர் தம்பிகள் அவசரப்பட்டு, இந்த ஆசையை தூண்டுகிற வாய்ப்பினை 2026 இல் பயன்படுத்தவேண்டும் என நினைத்து ஊடகங்களில் பேசி கொண்டிருந்தால், நாம் தமிழர் கட்சி இத்தனை வருடங்கள் உருவாக்கி வைத்திருக்கும் narrative பலவீனமடையும்.

  சீமான் தன்னை பற்றி சாமானியர்களிடத்தில் சிறிது சிறிதாக உருவாக்கிவரும் தனி நபர் ஆளுமை பிம்பமும் பலவீனமடையும்.

  நாம் தமிழர் கட்சி ஒரு வித desperation இல், விஜய்யின் கூட்டணிக்காக காத்திருப்பது போன்ற வெளிப்புற தோற்றம்  “கருத்தியல் அடிப்படையிலும் இலட்சிய நோக்கத்தின் அடிப்படையிலும் தனித்து நின்று களம் கண்ட கட்சி” என்ற narrative இனை பலவீனமாக்கும்.

  க.ஜெயகாந்த்

  Leave A Comment