தலைவர்களோ முழுநேரப் பதவிச் சூதாடிகள்; தமிழர்களோ நாதியற்றவர்கள்!
பெ. மணியரசன்!
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
அன்பார்ந்த தமிழ்ப் பெருமக்களே, வணக்கம்!
கடந்த 2023-லிருந்து 2024 சூன் 10 வரை மக்களவைத் தேர்தல் பரப்புரைகளின் கவன ஈர்ப்புகள், பதைபதைப்புகள் எனத் தொடர்ந்த பலவகை உளவியல் தாக்கங்கள் முடிந்துவிட்டன என்று மூச்சு விட்டிருப்பீர்கள்! அதுவும் மோடி-அமித்சா பேரரசர்கள் இந்தியாவின் எல்லாத் தொகுதிப் பகுதிக்கும் சாலை சர்க்கசுகள் நடத்தி, வாக்கு வேட்டை நடத்துவதற்கு வசதியாக இந்தத்தடவை 19-4-2024-இல்தொடங்கிய வாக்குப் பதிவு இடைவெளிவிட்டு, விட்டு ஏழுகட்டங்களாக 1.6.2024 வரை இந்தியாவின் பல பாகங்களில் நடந்தது.
புதுவை - தமிழ்நாட்டிற்கான வாக்குப் பதிவு 19.4.2024 அன்றே நடந்து முடிந்துவிட்டாலும், மற்ற மாநிலங்களில் நடக்கும் வாக்கு வேட்டைப் பரப்புரைகள், அத்து மீறல்கள், மோடியின் அருவருக்கத்தக்க பேச்சுகள் போன்றவை தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் கொடூரத் தாக்கங்களை ஏற்படுத்தின.
அப்பாடா தேர்தல் தெருக்கூத்துகள், வசவுகள், வன்முறைகள், கேவலங்கள் முடிந்துவிட்டன என்று பெரு மூச்சு விட்டு, பிற கடமைகளில் தமிழர்கள் இறங்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அடுத்த தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்துள்ளார். ஆம், 12.6.2024 அன்று மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை 13.6.2024 அன்று நாளேடுகளில் வந்துள்ளது.
“2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும் - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்” என்ற தலைப்பில் தினத்தந்தி 13.6.2024 அன்று ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முப்பெரும் விழா என்ற தலைப்பில் கோவையில் நடைபெறும் விழா குறித்தான அறிக்கை இது.
கோவையில் திமுக நடத்தும் மூன்று விழாக்கள் யாவை? 1. கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவுவிழா 2. நாற்பதுக்கு 40 என மக்களவையில் வெற்றி ஈட்டிய தளபதி ஸ்டாலினுக்குப் பாராட்டுவிழா. 3. வாக்களித்த தமிழ் நாட்டு மக்களுக்குப் பாராட்டு விழா! மூன்று விழாக்களில் இரண்டு கலைஞர் குடும்ப விழா! மூன்றாவது வாக்காள வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் விழா!
இந்த விழாவுக்கான அறிக்கையில்தான் அடுக்கடுக்கான, அடுத்த தேர்தல் பணிகள் குறித்து வரிசைப்படுத்துகிறார் ஸ்டாலின்.
”கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து, விக்கிரவாண்டித் தொகுதியின் இடைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அங்கும் நம் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும்.
“நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்ட மன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட, வரும் 15-ஆம் தேதி கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும். காணப்போகும் களங்கள் அனைத்திலும் திமுக வெல்லட்டும். கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!” - தினத்தந்தி 13.6.2024.
எந்நேரமும் தேர்தல் வெற்றி, பதவி பிடித்தல் என்ற வெறி மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் இருப்பதாகக் கருதக் கூடாது. மோடி, ராகுல், எடப்பாடி எனப் பல தலைவர்களுக்கும் அக்கட்சிகளைச் சேர்ந்த அடுத்த நிலைத் தலைவர்களுக்கும் இதே வெறிதான்!
பாரதியாரின் “நமக்குத் தொழில் கவிதை” என்ற பாடல் வரிகளை அரசியல் தலைவர்கள் பின்வருமாறு கூறுவது போல் மாற்றிக் கொள்ளலாம். “நமக்குத் தொழில் அரசியல், நாட்டைச் சுரண்டுதல், இமைப்பொழுதும் சோராமல் மக்களை ஏமாற்றுவது!”
இந்தியாவில் எப்போது பார்த்தாலும் எங்காவது தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்ப் பெருமக்களே, நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பொதுவாக இப்படி சிந்தித்துப் பாருங்களேன்!
இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் தேர்தல் வெற்றிக்குச் செய்கிற திட்டமிடலில், கொடுக்கிற கூட்டு உழைப்பில், இரவுபகலாக அலைவதில் நூற்றில் ஒரு பங்கு, காவிரியில் கர்நாடகம் மேக்கேதாட்டில் அணைகட்டுவதைத் தடுக்க, உச்சநீதமன்றத்தின் 2018 தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடச் செய்ய முயன்றதுண்டா? மக்களைத் திரட்டி மாபெரும் சனநாயகப் போராட்டங்களை நடத்தியதுண்டா?
உச்சநீதிமன்றத்தின் 2014 தீர்ப்பின்படி முல்லைவப் பெரியாறு அணையின் நீட்சியான சிற்றணையை வலுப்படுத்தி 152 அடி உயரம் தண்ணீர் தேக்க ஸ்டாலினோ, எடப்பாடியோ இவர்களின் கூட்டணிக் கட்சியினரோ முயன்றதுண்டா?
தமிழ்நாட்டு மாணவர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்குக்கோரி - தமிழ்நாடு தழுவிய மக்கள்திரள் தொடர் ஆர்ப்பாட்டங்களையோ, சனநாயகப் போராட்டங்களையோ, இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதாவது நடத்தியதுண்டா?
மாநில சுயாட்சிக் கோரிக்கைகளில் சிலவற்றை - கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல், ஜிஎஸ்டியை நீக்கி, வணிகவரி வசூல் உரிமையை மீண்டும் மாநிலங்களுக்குக் கோருதல் - வலியுறுத்தி இத்தலைவர்கள் தங்கள் தேர்தல் வேலைகளுக்குக் கட்சியை இறக்கிடும் முயற்சியில் நூற்றில் ஒரு பங்கு செய்ததுண்டா? போராடியதுண்டா?
இப்படி வினாக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!
நான் இந்த வினாக்களை எழுப்பும்போது, உங்கள் தமிழ்த்தேசியப் பேரியக்கம் என்ன செய்து கிழித்தது என்று சிலர் கேட்கக் கூடும்.
1. மேக்கேதாட்டு அணைகட்டும் இடம் நோக்கிப் போய் மறியல் செய்வதற்காக 7.3.2015 அன்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் 5000 உழவர்களுடன் தேன்கனிக் கோட்டையிலிருந்து என் தலைமையில் புறப்பட்டோம். அப்போதைய அதிமுக ஆட்சி எங்களைத் தடுத்து, தளைப்படுத்தி மூன்று வெவ்வேறு மண்டபங்களில் காவலில் வைத்தது. தொலைக்காட்சியில் பெருந்திரளாக உழவர்கள் கைதாவதைப் பார்த்துவிட்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி மிகவும் வியந்து பாராட்டி அறிக்கை வெளியிட்டார். அன்றே தொலைக் காட்சிகளில் அது ஒளிபரப்பானது. மறுநாள் ஏடுகளில் வந்தது.
காவிரிக்காக எத்தனையோ மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தினோம். அப்போதிருந்த காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, அது கொடுத்திருந்த இறுதித் தீர்ப்பையும் கைவிடும் முயற்சியில் இறங்கியது பாசக ஆட்சி! நீராற்றல் துறை அமைச்சர் உமாபாரதி நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டமுன்வரைவு ஒன்றை விவாதத்திற்கு வைத்திருந்தார். நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள காவிரித் தீர்பாயத்தை (Cauvery Tribunal) இரத்துச் செய்து இந்தியா முழுமைக்குமான ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்க முன்மொழியப்பட்ட சட்ட முன்வரைவு அது!
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் என் தலைமையில் உழவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 19 நாட்கள் (2019 மார்ச்சு 28 முதல்) இரவுபகலாகக் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். அப்போதைய அதிமுகவின் வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் வந்து பார்த்து ஆதரவு தெரிவித்தனர். திமுக தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு மூன்று மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வந்து பார்த்து ஆதரவு தெரிவித்தார். காங்கிரசுத் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஜி.கே. வாசன், சிபிஐ தலைவர் நல்லகண்ணு முதலியோர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வந்து பார்த்து வாழ்த்திப் பேசினர். இந்திய ஒன்றிய அரசின் மேனாள் அதிமுக அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் அடிக்கடி வந்துபார்த்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, டி. ராஜா (சிபிஐ) ஆகியோரிடம் பேசி, உமாபாரதி முன்மொழிந்த தீர்மானத்தை மாநிலங்களவை விவாதத்திற்கு எடுக்காமல் தடுக்குமாறு கோரினார்.
மாநிலங்களவையில் விவாதத்திற்காக வைக்கப்பட்டிருந்த அந்த சட்ட முன்வரைவு விவாதிக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டது. அந்த சட்டமுன்வரைவு மறுபடி வந்து விவாதித்து, சட்டமாகி, இந்தியா முழுமைக்குமான ஒற்றைத் தீர்ப்பாயம் பின்னர் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் காவிரித்த தீர்ப்பாயத் தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் காவிரித் தீர்ப்பை 2018-இல் வழங்கிவிட்டது; தப்பித்தோம்!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே அளிக்க வேண்டும் என்று பலகட்டங்களில் பெருந்திரள் மறியல் போராட்டங்கள் நடத்தி, இக்கோரிக்கையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம்தான் பிரபலப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஓசூர் அருகே டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் இந்திக்காரர்களைத் தனித் தொடர் வண்டியில் கொண்டு வந்து வேலைக்கும் சேர்த்துக் கொண்டு, மண்ணின் மக்களாகிய தமிழர்களைப் புறக்கணித்து வந்தனர். தடையை மீறி அங்கு டாட்டா ஆலை முன் மாபெரும் மக்கள் திரள் முற்றுகைப் போராட்டம் நடத்தி, ஆண்களும் பெண்களுமாக 650 பேர் கைதானோம். போராட்டம் அறிவித்த உடனேயே மாவட்டங்களில் டாட்டா நிறுவனம் தனிவேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தித் தமிழர்களை வேலையில் சேர்த்தது. இப்பணியை அப்போது திமுக செய்ததா? அதிமுக செய்ததா? வேறு யாராவது செய்தார்களா? தமிழ்த்தேசியப் பேரியக்கம் செய்தது!
தஞ்சையில் பேரரசன் இராசராசன் எழுப்பிய பெருவுடையார் கோயில் குடமுழுக்குகள் வடமொழியில் மட்டுமே நடந்து வந்தன. 5.2.2020 அன்று நடந்த பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தமிழ் ஓதுவார் ஒருவரைக் கோயில் கோபுரத்தில் ஏற்றிக் கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்றச் செய்து, தமிழ் மந்திரம் சொல்ல வைத்தோம்! அறிவிப்பாளர் “ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பெருவுடையார் கோபுரக் கலசத்தின் முன் தமிழ் ஒலிக்கிறது” என்று அறிவித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து, தமிழர் ஆன்மிகப் பெருமக்களும் ஆதரித்ததாலும், மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாலும் இச்சாதனையை நிகழ்த்த முடிந்தது. இப்படி இன்னும் எத்தனையோ சாதனைகள். இதனை, தமிழின் பெருமை பேசியே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிடக் கட்சிகள் செய்யவில்லை.
இவற்றுக் கெல்லாம் சிகரம் வைத்தது போல், தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலை - இன அரசியல் முழக்கத்தை முன்வைத்து 1990 களில் இருந்து பரப்பி வருவது எமது தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பெருஞ்சாதனை!
எத்தனையோ தடவை சிறையடைப்புகள், எம் தோழர்கள் மீது காவல் துறையினரின் தடியடிகள், காயங்கள்!
களத்தில் நின்று தமிழ்மொழி தமிழ் இனம், தமிழ்நாடு ஆகியவற்றின் உரிமைகளுக்குப் போராடிக் கொண்டே, ஈகங்கள் செய்து கொண்டேதான் மேற்படி தேர்தல் கட்சிகள் நடத்தும் கள்ளவணிக அரசியலைத் தோலுரித்து வருகிறோம்! பதவி-பணம்-விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சிய வீர்களாய் மக்களைத் திரட்டிப் போராடி வருகிறோம்.
கட்சிசார்பற்ற, கட்சிக் கொடிகளற்ற தன்னெழுச்சி மக்கள்திரள் போராட்டங்களே தமிழ்நாட்டில் ஏறுதழுவுதல் (சல்லிக்கட்டு) உரிமையை மீட்டன, மீத்தேன் எடுப்பதைத் தடுத்துக் காவிரி மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக்கின; தூத்துக்குடி நச்சு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச் செய்தன! இதற்கான போராட்டத்தில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவற்றில் திமுக, அஇஅதிமுக போன்ற கட்சித் தலைமைகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தில் 13 தமிழர்களைச் சுட்டுக்கொன்றதில்தான் எடப்பாடி ஆட்சியின் முத்திரை பதிந்துள்ளது.
திமுக, அஇஅதிமுக உள்ளிட்ட தேர்தல் கட்சிகள் போராடிச் சாதித்தவை யாவை? சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் வாதாடிச் சாதித்தவை யாவை? மக்கள் வரிப்பணத்தில் தரும் இலவசங்கள் மட்டுமே அவற்றின் சாதனைகள்! டாஸ்மாக் சாராயக் கடை திறந்து மக்களில் கணிசமானோரை குடிகாரர்களாக மாற்றி சமூகத்தைக் குட்டிச்சுவராக்கியிருப்பதே அவர்களின் சாதனை!
தேர்தல் வழியில் கிடைக்கும் பதவிகளை அடையும் தன்னல நோக்கில், தேர்தல் போர்களத் தளபதிகள் வேடமிட்டு வாக்காளர்களைத் தூண்டிவிடும் வசனங்களை ஸ்டாலின், எடப்பாடி வகையாறாக்கள் பேசித்திரிகின்றனர்! எப்போதும் தேர்தல் போட்டி மனநிலையிலேயே மக்களை இவர்கள் வைக்கிறார்கள்! காவிரி, முல்லைப் பெரியாறு அணை, பாலாறு, தென்பெண்ணை ஆறுகள் முதலியவற்றைக் காக்க இக்கட்சிகள் மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியதுண்டா? இல்லை!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் மற்றவர்களைச் சாடி விமர்சனம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திண்ணைப்பேச்சு வீரர்களைக் கொண்ட இயக்கமல்ல! முழுநேர விமர்சன விற்பன்னர்களின் முகாம் அல்ல! தமிழின உரிமை மீட்புக் களப் போராளிகளின் அறிவாயுதப் பாசறை! அதே வேளை அரசியல் சூதாடிகளை அம்பலப்படுத்தி மக்களை விழிப்படையச் செய்யும் செயற்களப் பாசறை! இத்தகைய அடித்தளத்தின் மீது நின்று கொண்டுதான் இந்தத் திறனாய்வுகளைச் செய்துள்ளேன்.
அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்களே, சிந்தியுங்கள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Leave A Comment