• Login / Register
  • ஆன்மிகம்

    'சரஸ்வதி யாமம்' எனப்படும் பிரம்ம முகூர்த்தம்; சிறப்புக்கள் என்ன..?

    சரஸ்வதி தேவி கண்விழித்து செயல்படும் நேரம் இந்த பிரம்ம முகூர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த நேரத்திற்கு 'சரஸ்வதி யாமம்' என்ற பெயரும் உண்டு. 

    காலை 4 மணி முதல் 6.30 மணி வரையான நேரத்தை, பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். மனதின் பிரச்சினைகளை அகற்றவும், இறைவனின் அன்பில் மனதை நிலைநிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முகூர்த்தம். 

    இந்த நேரத்தில் சிவபெருமானை நினைத்து வழிபட்டு, பல அற்புத வரங்களை பிரம்மதேவன் பெற்றதால், இதற்கு 'பிரம்ம முகூர்த்தம்' என்ற பெயர் வந்தது. இந்த நேரத்தில் நாமும் கண்விழித்து நீராடி, காரியங்களைத் தொடங்குவது வெற்றியாகவே முடியும். நீராட முடியாதவர்கள், பல் துலக்கி, கை, கால்களை மட்டுமாவது சுத்தப்படுத்திக்கொள்ளலாம். 

    பிரம்ம முகூர்த்தத்தைப் பற்றி மேலும் சில விஷயங்களை இங்கே பார்க்கலாம். 

    சூரியன் உதிப்பதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது. 

    பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது, வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால், அங்கு அசுபத் தன்மை இருக்காது. சுபத் தன்மை மட்டுமே ஏற்படும். 

    பிரம்ம முகூர்த்தம் எனப்படும், அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு திதி, வாரஇ நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். 

    பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து நீராடி, இறைவழிபாட்டைச் செய்ய வேண்டும். பிறகு மற்ற காரியங்களைச் செய்யத் தொடங்கினால், அன்றைய தினம் உள்ளம் உற்சாகத்துடன் செயல்படும். 

    பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சவுபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    Leave A Comment