• Login / Register
 • ஆன்மிகம்

  இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே நம் வாழ்வும்!

  பணம், அழகிய வீடு, அழகான மனைவி-மக்கள், உயர்ந்த பதவி போன்றவை இருந்தால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்பது பலரது எண்ணம். ஆனால் இதுவெல்லாம் இருந்தால் மட்டும் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. இவை இருந்தால் இறைவனின் அருளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் மிகப்பெரிய தவறு என்கிறார்  பேராசிரியர் அ. முகம்மது அப்துல்காதர் 

  நிம்மதியான வாழ்வுக்கு வழிகாட்டுவது இறையச்சமே: 

  மனித வாழ்க்கை விசித்திரமானது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது படைத்த ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்குள் அந்த மனிதன் போடும் திட்டங்களும், ஆடம்பர வாழ்க்கையும், ஆணவச்செயல்களும் கணக்கில் அடங்காதவை. 

  இந்த நிமிடம் இருக்கும் மகிழ்ச்சி அடுத்த விநாடியே மாறிப்போகும் நிலையை நம்மில் பலர் அனுபவித்து இருக்கலாம். இந்த நொடியில் காணப்படும் துன்பம், வலி. வேதனைகள் இறைவனின் அருளால் அடுத்த விநாடியே மாறி சுகம் கிடைத்ததையும் பலர் அறிந்திருக்கலாம். இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே நம் வாழ்வும், வளமும், நலமும் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை. 

  அந்த நிம்மதியான வாழ்வு கிடைக்க நாம் நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது. கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை முறையும் நமக்கு படிப்பினைகளை கற்றுத்தருகிறது. 

  நிம்மதியான வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அதற்கு தடையாக நமது பேராசைகள், ஆணவம், உறவுகளையும், நண்பர்களையும் ஒதுக்கி வைத்து வாழ்வது போன்ற தீய குணங்கள் உள்ளன. 

  'கடப்பாரையை சாப்பிட்டு விட்டு சுக்கு கஷாயம் சாப்பிட்டால் எப்படி ஜீரணமாகும்?' என்று கிராமத்தில் பழமொழி உண்டு. அதுபோல மலையளவு பாவங்களையும், பாவச்செயல்களையும் செய்துவிட்டு, இறைவன் காட்டிய வழியில் வாழாமல் மனம்போன போக்கில் வாழ்ந்து விட்டு மன நிம்மதியைத்தேடினால் அது எப்படி கிடைக்கும்?. 

  பணம், அழகிய வீடு, அழகான மனைவி-மக்கள், உயர்ந்த பதவி போன்றவை இருந்தால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்பது பலரது எண்ணம். ஆனால் இதுவெல்லாம் இருந்தால் மட்டும் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. 

  இவை இருந்தால் இறைவனின் அருளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் மிகப்பெரிய தவறு. நமது தேடல்களும், எண்ணங்களும், ஆசைகளும் தான் நமது வாழ்வின் மகிழ்ச்சியை நிர்ணயம் செய்கின்றது. நிம்மதியைத்தேடி நாம் எங்கும் அலையவேண்டியதில்லை. 

  அது நம்மிடம், நம் வாழ்க்கை முறையிலேயே உள்ளது. இறைவனின் நெருக்கம் தான் நமது வாழ்வை முழுமையாக்குகின்றது. இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: "உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் உங்களை நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவை அல்ல; ஆயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர. 

  அத்தகையவர்களுக்கே, அவர்கள் செய்த செயல்களின் கூலி இரு மடங்கு இருக்கிறது. மேலும், அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியோடு இருப்பார்கள்". (திருக்குர்ஆன் 34:37). உயர்ந்த மாளிகைகளில் வாழும் வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கையல்ல. 

  நாம் செய்யும் இறைவணக்கம், நற்செயல்கள் போன்றவற்றின் மூலம் இறைவனின் நெருக்கத்தையும், அன்பையும் பெறும் போது கிடைக்கும் நிம்மதி தான் மிகவும் சிறந்தது என்பதை இந்த வசனம் வலியுறுத்துகிறது. 

  யார் அல்லாஹ்வின் மீதும், அவன் அருளிய திருக்குர்ஆன் வசனங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தார்களோ அவர்கள் வாழ்வு நிம்மதி நிறைந்ததாக இருக்கும். இதையே கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம் இவ்வாறு விளக்குகிறது: "இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் 'ஸகீனத்' (நிம்மதியை) அல்லாஹ் தான் இறக்கியருளினான்; அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக. 

  வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிகவும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்". (திருக்குர்ஆன் 48:4). அன்பு சகோதரர்களே, இந்த திருக்குர்ஆன் வசனம் கூறும் பொருளை நாம் அனைவரும் மிகவும் கவனமுடன் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்தால், அவன் அருளால் நமக்கு நிம்மதியைத் தருவான். இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் மிகச்சிறந்த சொர்க்க வாழ்வைத்தருவான். 

  இதுபற்றி தனது திருமறையிலே அல்லாஹ் நமக்கு இவ்வாறு உறுதி அளிக்கின்றான்: "அல்லாஹ், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். அவர்களின் பாவச்சுமையையும், அவர்களிலிருந்தும் நீக்கி விடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கின்றது". (திருக்குர்ஆன் 48:5). அல்லாஹ்விடத்தில் நாம் மகத்தான வெற்றியைப்பெற வேண்டுமா?. 

  இந்த கணம் முதல் இறைவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறையச்சத்துடன் வாழ்ந்து இறைவன் காட்டிய வழியில் நமது வணக்க வழிபாடுகளை, வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொண்டு நிம்மதி பெறுவோம், பாவங்களை களைந்து சுவனத்தை நோக்கி நடைபோடுவோம். 

  நன்றி : பேராசிரியர் அ. முகம்மது அப்துல்காதர் 

  Leave A Comment