யாழ். தையிட்டியில் இரகசியமாக திறந்து வைக்கப்பட்ட விகாரை!
யாழ்ப்பாணம், வலி வடக்கும் - தையிட்டி பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 'தையிட்டி திஸ்ஸ' விகாரை இன்று (25) அதிகாலை இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி பகுதி முற்றிலுமாகவே தமிழர்கள் வாழும் பிரதேசமாகும்.
1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வலிகாமம் பகுதியை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட படையெடுப்பை அடுத்து அப்பிரதேசங்களை சேர்ந்த தமிழர்கள் உடுத்த உடையுடன் வெளியேறிருந்தனர்.
பலாலி விமான நிலைய பகுதி உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்களது நிலங்களை ஆக்கிரமித்து உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி இராணுவத்தினரது ஆக்கிரமிப்பிற்குள்ளாகவே இருந்து வந்தது.

கடந்த ஆண்டுகளில் குறிப்பிட்ட பிரதேசங்களில் மக்கள் பாவனைக்கு மீள கையளிக்கப்பட்எடிருந்தாலும் மக்கள் வாழிடங்களும், விவசாய நிலங்களுமாக 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இன்னும் இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில்தான் உள்ளது.

இவ்வாறான நிலையில் வலிகாமம் வடக்கு பிரேதசத்திற்குட்பட்ட தையிட்டி பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளையும் உள்ளடக்கியதாக சுமார் 20 ஏக்கர் காணியில் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டிஎழுப்பப்பட்டுள்ளது.

முற்றிலுமாகவே தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் பிரமாண்டமான பௌத்த விகாரை ஒன்றை கட்டியிருப்பது அப்பட்டமான பௌத்த மயமாக்கல் நடவடிக்கையாகும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் தரப்பினர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று (25) அதிகாலை சிங்களப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களுடன ;இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.30அளவில் யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரி 3 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கறிப்பிடத்தக்குது.
இந்தநிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Leave A Comment