• Login / Register
  • விளையாட்டு

    ஐரோப்பாவை துறந்து சவூதி கிளப்பில் ரொனால்டோ

    ஐரோப்பிய கால்பந்து உலகில் வலம்வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களையடுத்து சவூதி அரேபிய கிளப்பில் இணைந்து ஆசிய கால்பந்து உலகில் பிரவேசித்துள்ளார்.

    போா்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நாசா் அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்த நடைமுறை நிறைவடைந்துள்ளது.

    அதுதொடா்பான புகைப்படத்தை அல் நாசா் அணி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய வரலாறு படைக்கப்படுகிறது. ரொனால்டோ இணைந்திருப்பதன் மூலம் எங்களது கிளப் புதிய வெற்றியை நோக்கி பயணிக்க இருக்கிறது. அத்துடன், எங்கள் தேசமும், எதிா்கால தலைமுறையினரும் கால்பந்து உலகின் சிறந்த முன்னுதாரணத்தை காணவுள்ளனா்’ என்று கூறியுள்ளது.

    அதேபோல் ரொனால்டோ வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு புதிய நாட்டில் புதுவிதமான லீக் போட்டியில் பங்கேற்பதற்காக ஆா்வமுடன் இருக்கிறேன். ஐரோப்பிய கால்பந்தில் எனது இலக்குகளை எட்டியிருக்கும் நிலையில், தற்போது ஆசிய கால்பந்தில் எனது அனுபவங்களை பகிா்வதற்கு இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

    அல் நாசா் கிளப்புடனான ஒப்பந்தத்தின்படி, 2025 ஜூன் வரை சுமாா் இரண்டரை ஆண்டுகளுக்கு ரொனால்டோ அந்த கிளப்பில் விளையாட இருக்கிறாா். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ.1,655 கோடி ஈட்டும் ரொனால்டோ, கால்பந்து உலகிலேயே அதிக ஊதியம் பெறும் வீரா் என்ற பெயரைப் பெறுகிறாா்.

    பலத்த சலசலப்புக்கு இடையேதான் ரொனால்டோ இந்த புதிய கிளப்பில் ஒப்பந்தமாகியிருக்கிறாா். முன்னதாக, ஐரோப்பிய கிளப்பான மான்செஸ்டா் யுனைடெட்டிலிருந்த ரொனால்டோ, ஒரு தொலைக்காட்சி நோ்காணலின்போது, கிளப்பில் தாம் தொடா்ந்து களமிறக்கப்படாமல் பெஞ்சில் வைக்கப்பட்டது தொடா்பாக அதன் பயிற்சியாளா், உரிமையாளா்களை கடுமையாக விமா்சித்தாா்.

    இதனால் அவருடனான ஒப்பந்தத்தை மான்செஸ்டா் யுனைடெட் முறித்துக் கொண்டது. அதிலிருந்து சில நாள்களிலேயே நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் போா்ச்சுகல் அணியின் முக்கியமான ஆட்டங்களில் ரொனால்டோ பெஞ்சில் வைக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் ரொனால்டோவின் இந்தப் புதிய நகா்வின் மூலம், ஐரோப்பிய கால்பந்து சற்று இழப்பைச் சந்தித்தாலும், மத்திய கிழக்கு கால்பந்து உலகத்துக்கு இது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. மேலும், ஆசிய கால்பந்தில் இது புதிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

    விளையாட்டுத் துறை சாா்ந்த பல்வேறு நகா்வுகள் மூலம் சா்வதேச அரங்கில் தனது பிம்பத்தை பெரிதாக்க முனைந்து வரும் சவூதி அரேபியா, அதன் ஒரு முயற்சியாகவே ரொனால்டோவை வாங்கியதாகவும் விவாதிக்கப்படுகிறது. ஏற்கெனவே நியூகேஸில் கிளப்பின் உரிமையாளராக இருக்கும் சவூதி அரேபியா, 2030 உலகக் கோப்பை போட்டியை நடத்தவும் முனைகிறது.

    Leave A Comment