• Login / Register
  • விளையாட்டு

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர்- கோப்பையை வென்றது குஜராத் அணி

    15ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி விளையாட்டரங்கத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

    இந்த இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினார்கள்.

    ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும், அடுத்த வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இதன் பிறகு வந்த ராஜஸ்தான் அணியின் மற்ற வீரர்கள் குஜராத் அணியினரின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்து, அடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

    ஜாஸ் பட்லர் மட்டுமே 39 ரன்களை எடுத்தார். 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே எடுத்தது.

    குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

    இதன் பின்னர் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

    தொடக்க வீரர் சாஹா 5 ரன்களிலும், மேத்யூ வேட் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினார்கள்.

    இதன் பிறகு, கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 45 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


    இதனையடுத்து, களமிறங்கிய மில்லா் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார்.

    குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    இதன் மூலம், குஜராத் அணி தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று வரலாற்று சாதனையை படைத்தது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி தனது அணி கோப்பையை வெல்ல கடுமையாக போராடி இருக்கிறார். 

    பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடிய குஜராத்  அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


    Leave A Comment