• Login / Register
  • விளையாட்டு

    இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி

    இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 இருபது ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தநிலையில், ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

    இதனையடுத்து, முதலில் களமிறங்கிய இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களை எடுத்தது.

    அதிகபட்சமாக அசலங்கா 39 ரன்களையும், குசால் மெண்டிஸ் 36 ரன்களையும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய தரப்பில் பந்து வீச்சாளர்கள் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

    இதனையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.


    தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    பிஞ்ச் 24 ரன்களிலும், வார்னர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ஆஸ்திரேலியா அணி பவர் பிளேயில் 3 விக்கெட்களை இழந்து 63 ரன்களை எடுத்தது.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 126 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    இலங்கை அணி தரப்பில், வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மேத்யூ வேட் வென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கோப்பை தொடரில் 2 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி தொடரையும் கைப்பற்றியது.


    Leave A Comment