• Login / Register
  • விளையாட்டு

    ASIA CUP-2023 FINAL | விசாரணை கோரி முறைப்பாடு!

    16 ஆவது ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை அணி படுதோல்வி அடைந்த நிலையில் குறித்த போட்டி முடிவு குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நடப்பு தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த இலங்கை அணி யாரும் எதிர்பாராத வகையில் மிக மோசமான துடுப்பாட்டம் காரணமாக மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்திருந்தது.

    கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 15.2 ஓவர்களில் வெறும் 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததுடன் குறித்த இலக்கை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி அநாயசமாக வெற்றி பெற்றிருந்ததை இலங்கை ரசிகர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில், ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைமையகத்திற்கு நேற்று (18) முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

    கையூட்டல், ஊழல் மற்றும் பொதுநிதி வீண்விரயத்திற்கு எதிரான வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் ஜமானி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

    காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைந்த ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தார்.

    இந்த போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதன் காரணமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல், மோசடி மற்றும் பொது நிதி வீண்விரயத்திற்கு எதிரான வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் ஜமானி கமந்த துஷார தெரிவித்தார்.

    Leave A Comment