• Login / Register
  • விளையாட்டு

    1-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 17) நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சினைத் தேர்வு செய்தார்.

    இதனையடுத்து, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

    ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் குவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர்.

    இந்திய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி 4 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் என்று அறியப்படும் சூர்யகுமார் யாதவ் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். ஷுப்மன் கில்லும் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. அவர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால், இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்த சூழலில் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கியது.

    இந்திய அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. கேப்டன் ஹார்திக் பாண்டியா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவர் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். அவருக்கு உறுதுணையாக ரவீந்திர ஜடேஜா விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக பேட்டிங்  செய்தார்.

    சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் போட்டிகளில் இது அவருடைய 13-வது அரைசதமாகும்.

    சிறப்பாக விளையாடிய இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம், 39.5 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர்.

    கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருவரும் களத்தில் இருந்தனர். கே.எல்.ராகுல் 75 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    Leave A Comment