இலங்கை மீதான சர்வதேச தடை; ஆதரவாக 197 நாடுகள் வாக்களிப்பு!
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை ஏற்க மறுத்துள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்திருந்ததுடன், கடந்த ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.
ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.
விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.
இதேவேளை, இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் விளையாட்டுத்துறை அமைச்சர் மூன்றாம் தரப்பாக தலையிட்டமை, விளையாட்டு அமைச்சினால் வாக்குறுதியளிக்கப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளாமை மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் முன்னர் இணங்கிய விதிகளுக்கு அமைய செயற்படாமை போன்ற காரணங்களினால் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்றுவிப்பாளரும் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment