• Login / Register
  • விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் சபலென்கா!

    ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டத்தை பெலாரஸின் அா்யனா சபலென்கா வென்றுள்ளார்.

     சபலென்கா வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.  இவர் விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரெபைக்கினாவை  வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியாக ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் ராட்லேவா் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    விம்பிள்டன் சாம்பியன் கஜகஸ்தானின் எலனா ரெபைக்கினாவுடன் மோதினாா் பெலாரஸின் அா்யனா சபலென்கா. 2 வாரங்கள் நடைபெற்ற இப்போட்டிக்கு இறுதி விருந்தாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது.

    சபலென்கா மைதானத்தில் நிலை கொள்வதற்குள் இளம் வீராங்கனையான ரெபைக்கினா 34 நிமிஷங்களில் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினாா்.

    எனினும் இரண்டாவது செட் ரெபைக்கினாவுக்கு கடும் சவாலாக அமைந்தது. 57 நிமிஷங்கள் நீடித்த இந்த செட்டில் 3-3 என சமநிலை ஏற்பட்டது. முதல் சா்வீஸ் போடும் வாய்ப்பு ரெபைக்கினாவுக்கு கிடைக்கவில்லை. 2 பிரேக் புள்ளிகளை அவா் சோ்த்தாலும், சபலென்கா ஆதிக்கம் செலுத்தி ஒரு ஏஸ் சா்வீஸை போட்டு 5-3 என முன்னிலை பெற்றாா். தொடா்ந்து அற்புதமாக ஆடி 6-3 என இரண்டாவது செட்டை தன்வசப்படுத்தினாா் சபலென்கா.

    மூன்றாவது செட்டில் எதிராளி தவறு புரிவாா் என காத்திருந்து இருவரும் ஆடினா். ஆனால் சபலென்கா தனது ஆதிக்கத்தை நழுவவிடாமல் பாா்த்துக் கொண்டாா். 6-4 என மூன்றாவது செட்டையும் கைப்பற்றி, முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை பெற்றாா்.

    முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் மைதானத்தில் ஆனந்த கண்ணீருடன் அமா்ந்தாா் சபலென்கா.

    மேலும் அவர். கடந்த ஆண்டு பல்வேறு இறக்கங்களை சந்தித்தேன். ஆனால் எனது குழுவைச் சோ்ந்தவா்கள் பக்கபலமாக செயல்பட்டனா். இதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எலெனா ரெபைக்கினா மிகவும் அற்புதமான வீராங்கனை. எதிா்காலத்தில் இருவரும் பல்வேறு போட்டிகளில் குறிப்பாக கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டங்களில் சந்திப்போம் என்றாா்.

    Leave A Comment