தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு திருகோணமலையில் எழுச்சிபூர்வமான வரவேற்பு!
'நமக்காக நாம்' பிரசார பயணத்தின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் எழுச்சிபூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் 'நமக்காக நாம்' பிரசார பயணம் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதற்கட்டமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்திற்கான தோர்தல் பரப்புரை நடவடிக்கைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்திற்கான பரப்புரை நடவடிக்கைகளுக்காக சென்ற தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு எல்லைக்கிராமமான திரியாய் பகுதியில் வைத்து சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் எல்லையில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் இன உணர்வாளர்களின் வரவேற்ப்புடன் திருகோணமலை மாவட்டத்திற்கு தமிழ்ப் பொது வேட்பாளர் வரவேற்கப்பட்டு பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள், பேருந்துகள் சகிதம் வாகனப் பேரணியாக இளைஞர்கள் எழுச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றிருந்தனர்.

கும்புறுப்பிட்டி கிராமத்தில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த யதீந்திரா உள்ளிட்ட பிரமுகர்களும் அப்பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று உரைகளை ஆற்றியிருந்தனர்.

இதன்போது நூற்றுக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து குச்சவெளி, சல்லி அம்மன் கோவில் பகுதி, அலஸ்தோட்டம், 5 ஆம் கட்டை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன், ஆதரவுகோரி பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்.

இன்றைய 'நமக்காக நாம்' பிரசார பயண விபரம்!
பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் 'நமக்காக நாம்' பிரசார பயணம் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று (06) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட உள்ளது.

சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்ல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (05) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது நாளான இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு திருக்கோணேசுவர் கோவிலில் வழிபாடு நடத்தியதை தொடர்ந்து காளி கோவிலுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்ந்து மூதூர் பட்டித்திடலில் 9.00 மணியளவில் பரப்புரை கூட்டமும், லிங்கபுர கிராமத்தில் 11மணியளவில் பரப்புரை கூட்டமும், சம்பூரில் மாலை 3மணியளவில் பரப்புரை கூட்டமும் இடம்பெற்று திருகோணமலை மாவட்டத்திற்கான முதற்கட்ட பிரசார பயணம் நிறைவுக்கு வருகிறது.
Leave A Comment