• Login / Register
  • செய்திகள்

    போலீஸ் கெடுபிடி; எச்சரித்த விஜய் - கட்சி நிர்வாகிகள் மும்முரம்!

    தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றுவதற்கு போலீசார் பலத்த கெடுபிடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடந்த பெப்ரவரியில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி கட்சி கொடியை அறிமுகப்படுத்தியிருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும், நிர்வாகிகள் அனைவரும் உரிய அனுமதியுடன் பொது இடங்களிலும், தங்களது வீட்டிலும் கட்சி கொடியை ஏற்ற வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி இருந்தார்.

    இதற்காக கொடிகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இதையடுத்து, நேற்று 234 தொகுதிகளிலும், தவெக நிர்வாகிகள் கட்சி கொடியை பொது இடங்களில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு பொது இடங்களில் கட்சி கொடியை உரிய அனுமதி பெற்று நிர்வாகிகள் ஏற்றினர்.

    ஆனால், பல இடங்களில் காவல்துறை அனுமதியின்றி நிர்வாகிகள் கட்சி கொடியை ஏற்றியதால், கொடி கம்பம் வைத்து, கொடியேற்றுவதற்கு காவல்துறை அவர்களை அனுமதிக்கவில்லை.

    இதனால், போலீஸாருக்கும், நிர்வாகிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களது வீட்டின் முன்பு கூட தவெக கொடியை ஏற்றக்கூடாது என, இதுவரை வேறு எந்த கட்சிக்கும் இல்லாத வகையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு போலீஸார் அதிக கெடுபிடி கொடுப்பதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    ஆனாலும், உரிய அனுமதி பெற்று தான் கட்சி கொடியை பொது இடங்களில் ஏற்ற வேண்டும் என்று, தவெக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி இருக்கிறது.

    அனுமதியின்றி கொடியை ஏற்றி பிரச்சினையில் ஈடுபட்டால், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருக்கிறது.

    இதையடுத்து, உரிய அனுமதி பெற்று கட்சி கொடியை வைக்கும் பணிகளில் தவெக நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Leave A Comment