2026 இல் பாஜக ஆட்சி - அண்ணாமலை நம்பிக்கை!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
பெரம்பலூர் தனியார் கல்லூரி யில் நேற்று நடைபெற்ற `பாஜக பூரண சக்தி கேந்திரம் எனது இலக்கு' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகள் பெற்று, 3-ல் ஒரு வாக்குச்சாவடியில் முதலிடம் அல்லது 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. கட்சிப் பணியாற்றி, அதிக வாக்குகள் பெறச்செய்த கட்சி உறுப்பினர்களைப் பாராட்டி வருகிறோம்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மூத்த தலைவர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தி, கட்சியினரின் கருத்துகளைக் கேட்டுள்ளனர். இவற்றை ஆராய்ந்து, கட்சியை வலுப்படுத்துவோம்.
மத்திய பட்ஜெட்டில் அனைத்துமாநிலங்களுக்கும் ரூ.48 லட்சம்கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. தமிழகத்தை புறக்கணிக்க முடியாது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று திமுக பேசுவது அரசியலுக்காகத்தான். நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது மைக்கை ஆஃப் செய்து விட்டனர் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அவர் 7 நிமிடங்கள் பேசியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகமுதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. 2022 முதல் அவர் நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்துகொள்வது இல்லை. இவ்வாறு அரசியல் செய்வது சரியில்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 18.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். எனவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Leave A Comment